வலைப்பதிவில் தேட...

Tuesday, September 15, 2015

நான் சொல்வனவும் செய்வனவும் சரித்திரத்தைச் சேர்ந்தவை-ஹிட்லர்...



 


சென்னை வந்த பிறகு ஒரு  நண்பர் ஒருவர் ஹிட்லர் பற்றிய ஒரு புத்தகம் வேண்டும் வாங்கித்தர முடியுமா என்று கேட்டிருந்தார். சரி என்று சொல்லியிருந்தேன். மதுரைபுத்தகத்திருவிழா ஒரு வாய்ப்பென்று கருதி அங்கே சென்றேன். மதுரை புத்தகச்சந்தைக்கு சென்றதே மெனக்கெட்டு ஹிட்லர் பற்றிய ஏதேனும் ஒரு புத்தகம் வாங்குவதற்குதான். முன்னேற்றப்பதிப்பகம் சார்பில் " ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி" என்ற தலைப்பில் விலை ரூ 225/- க்கு பார்த்தவுடன் வாங்கி விட்டேன். அப்புறமாக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் அமைக்கப்பெற்ற புத்தகக்கடைக்குச் சென்றேன் அங்கேயும் ஒரு ஹிட்லர் புத்தகம் பார்த்தேன். விலை ரூ 150/- அதையும் வாங்கி விட்டேன்.

ஒருபுத்தகத்தை அந்த நண்பருக்கு பரிசளிக்க நாம் படிக்க ஒன்று என வாங்கி விட்டேன்.  டி என் ஜா எழுதிய பசுவின் புனிதம், பாவ்லோ பிரய்ரே எழுதிய ஒடுக்கப்பட்டோருக்கான கல்வி முறை  மாசேதுங் எழுதிய ரெட்புக் சாகித்திய அகாடமி வெளியீட்டில் கன்னட சிறுகதைகள்  உள்ளிட்ட சில புத்தகங்கள் சுமார்  ஒரு ஆயிரம் ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியாகி விட்டது.

விருதுநகர் செல்ல பஸ் ஏறிய பிறகு ஹிட்லர் தலைப்பிலான இரு புத்தகங்களையும் புரட்டிப்பார்த்தால் ஒரே ஆச்சரியம். திரு சாமி நாத சர்மா என்பவர் எழுதிஉள்ள  ஒரே புத்தகம்தான். வெளியீட்டாளர் மட்டும்தான் வேறு. அதே உள்ளடக்கம். ஆனால் முன்னேற்றப்பதிப்பகம் ரூ 225/-க்கும் உலகத் தமிழ் வளர்ச்சித்துறை ரூ 150/- க்கும் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க பதிப்பகங்கள்.

இனி ஹிட்லர் புத்தகத்திலிருந்து:

2014 ஆண்டு வெளியிடப்பட்ட முதற்பதிப்பிற்கான முன்னுரையில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும்  பாராட்டு ஒருங்கே இருக்கிறது.
புத்தகத்தின் கடைசியில்  வாழ்க ஹிட்லர் என்று சாமி நாத சர்மா முடித்திருந்தார்.
புத்தகத்திலிருந்து:

"அந்நிய  நாட்டிலே ஒரு அரசனாக இருப்பதைக்கட்டிலும் தனது தாய் நாட்டிலே ஒரு தோட்டியாக இருப்பதையே கௌரவமாகக்கொள்ள வேண்டும்".

ஆசிரியரின் மொழியில்:

அன்பு,  நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை
ஐந்தும் ஹிடல்ரிடம் உண்டு.
முகத்தில் எப்பொழுதும் புன்சிரிப்பு
யாருடனும் பணிவாகப்பேசுதல்
சர்வாதிகாரி என்று காட்டிக்கொள்வதில்லை
ஒழுக்கம் நிறைந்தவன்
சிகரெட், மதுபானம் உபயோகிப்பதில்லை
மாமிசம் கையால் தொடுவது கூட இல்லை
மரக்கறிதான் உணவு. அதுவும் மிகவும் சாதாரணமானது.
ரொட்டி, பால், பழம், பருப்பு தினுசுகளில் ஏதேனும் ஒன்று
தனியாக சாப்பிடமாட்டான்
இரண்டொரு நபர்களை விருந்தினராக வைத்துக்கொண்டு சாப்பிடுவான்
சாப்பிடும் போது உரக்கச் சிரிப்பான்
உற்சாகத்துடன் பேசுவான்
மேஜையைத்தட்டுவான்
தன்னை மறந்து எழுந்து நிற்பான்
பிறர் நகைப்புடன் பேசினால் அதனை பூராவும் அனுபவிப்பான்
எல்லோருடனும் சமமாகப்பழகுவான்
பெண்களிடத்தில் மிக அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்வான்
சங்கீதம், ஓவியம், நாடகம்  தன்னை முழுவதும் ஒப்புக்கொடுத்துவிடுவான்
பாடிய கலைஞரை கௌரவிப்பான்
மன அமைத்தீகு சங்கீதத்தை நாடுவான்
ஓவியம் வரைவான்
குழந்தைகளிடம் அன்பு போற்றுவான்
வேடிக்கை செய்வான்
ஓடி விளையாடுவான்
பொதுப்பணத்தைக்கையாடும் விஷயத்தில் மிகவும் கண்டிப்பாகவும் சிக்கனமாகவும் இருப்பான்
யாரையும் எழுத்து நின்று வரவேற்பான்
வழியனுப்ப சிறிது தூரம் உடன் செல்வான்
வந்தனம் கூறுவான்

உடை பாவனை ஆகி இரண்டையும் பார்த்தால் சாதாரண ஒரு கீழ்த்தர உத்தியாகஸ்தனுக்கும் இவனுக்கும் எவ்வித வேற்றுமையும் காணப்பட மாட்டாது.

மற்றெல்லா வகையிலும் போலவே உடையிலும் இவன் ஆடம்பரமில்லாதவனே.
நாய்களிடம் பிரியாம இருப்பான். மக், உல்ஃப், பிளான்டா பெயருள்ள 3 நாய்களை இவன் அனேகமாகக் கூடவே வைத்திருப்பான். அவைகளுடன் குதித்து விளையாடுவான்.
"வாகென்  ஸல்ட" ஹிட்லரின் சொந்த வீடு. ஓய்வெடுக்க அங்கே செல்வான்
மூன்று மணி நேர ரயில் பயணம் செய்து அங்கே செல்வான்
மலையடிவாரமும், ஏரிக்கரையும் சந்திக்கும் ஒரு அழகிய இடம் அவனது ஓய்விடம்.

ஒரு நாளில் 18 மணி நேரம் உழைப்பான்

கூர்ந்து கவனித்தல், ஆழ்ந்து படித்தல், குறிப்பெடுத்தல் அவனது வழக்கம்.
முசோலினியைப்போல் பெரிய படிப்பாளி  இல்லை ஆனால் அனுபவ ஞானம் நிறைய இவனுக்கு இருப்பதைப்போல் வேறொருவருக்க்கும் இல்லையென்று சொல்லப்படுகிறது.
யூதர்களும் மார்க்சீயமும் இவனுடைய முதல் எதிரிகள்.
அவனுடைய கட்சி ஜெர்மானிய தொழிலாளர் கட்சி.
அந்தக்கட்சியில் ஏழாவது உறுப்பினனாக தன்னை பதிவு செய்து கொண்டான்
கூட்டங்கள் மியூனிக்  நகரில் பீர் ஹாலில் நடக்கும்.
எட்டு மணி வேலை நேரக்கொள்கைய ஒத்துக்கொண்டவன்.
ஜெர்மானியர்களே உயர்ந்தவர்கள் என்ற கொள்கை கொண்டவன்.
அவன் சான்சலராக ஆனவரை மட்டுமே இந்தப்புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது (1930கள் வரை )

சொல்ல வந்தது:

ஒருபத்து லட்ச ரூபாய்க்கு ஒபாமா முன்னால் தனது பெயரை தங்கத்தால் பொறித்துக்கொண்ட கோட்டைப்போட்டுக்கொண்ட  ஒரு ஜனநாயகப்பிரதமர் கூட ஹிட்லரின் வார்த்தைகளால் தன்னை நிலை நிறுத்தப்பார்க்கிறார். அதாவது இன்றைய பிரதமர் சொல்லுகிறார் நான் ஏழைகளைப்போலவே சாதாரண உடைகள் அணிகிறேன். சொல் ஒன்று செயல் ஒன்று என்பதாக இருக்கிறது இவரின் பேச்சு...

நான் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கிறேன் என்று நமது முதல்வர் கூட  சில ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார். 2011 இல் ஆட்சிக்கு வந்த போது ஒரு பத்திரிகையாளர் கூட்டம் நடந்தது. அதில்  நான் வாரா வாரம் பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என்று சொல்லி விட்டு  நான்கரை ஆண்டுகளாகியும் கூட அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காதது. இதுவும் கூட சொல் ஒன்று செயல் ஒன்று என்பதாகவே தெரிகிறது.  கூடவே அவர் 18 மணி நேரம் உழைக்கிறேன் நாட்டு மக்களுக்காக என்று சொன்னதும்.


No comments: