வலைப்பதிவில் தேட...

Monday, December 24, 2012

மூன்றாம் பாலினம் என்றால் முதல் பாலினம் யார்?

இந்த உலகத்தில் "மூன்றாம் பாலினம்" என்ற சொல்லாடல்  திரு நங்கையர் உலகத்தைக்குறிப்பிடுவதென்று கொண்டால் முதல் பாலினம் யார்? ... லிவிங் ஸ்மைல் வித்யாவோ அல்லது பிரியா பாபுவோ ஒரு பேட்டியில் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார்கள். திரு நங்கை என்பது மூன்றாம் பாலினம் என்றால் தனித்துச் சொல்லத் தேவையில்லை.பொதுப்புத்தியில் இது உறைந்தே கிடக்கிறது.  இது ஆணாதிக்க சமூகம். ஆகவே ஆண் முதலாகவும் பெண் இரண்டாவதாகவும்  நடை முறைப்படுத்தப்பட்டு விட்ட ஒரு சமூகத்தில் அவரது  கேள்வி மிகவும் அற்பமாக அல்ல; எனக்கு மிகவும் அற்புதமாகப்பட்டது.

மில்லியன் டாலர் கேள்வி என்பார்களே அது இதுதான் என நான் நினைக்கிறேன்.


சமீபத்தில் சு சமுத்திரம் ( 1941-2003) எழுதிய வாடாமல்லி நாவல் படித்தேன். அதில் மூன்றாம் பாலினம்,பொட்டை, அலி, அவனோ, அவளோ,அதுவோ,அரவாண் என்று சொல்லாடல்களைப் பயன்படுத்தியிருந்தார். அதில் சுயம்பு என்ற ஒரு இளைஞன் எஞ்சினியரிங் கல்லூரியும் மெடிக்கல் கல்லூரியும் இருக்கிற சிதம்பரத்தில் முதலாண்டு படிக்கும்போது பெண்மைத்தன்மை அதிகமாகி நடை உடை பாவனைகள் மாறி செயற்கையாக அசைவுகளை உள்ளடக்கி மாணவர்களுடன் இருக்க முடியாமல் கிளம்பி ஊருக்குப்போகிறான். போகிற பஸ்ஸில் ஒரு பெண்ணின் இருக்கைக்குப்பக்கத்தில் உட்காரப்போக( ஆண்கள் பக்கம் உட்காரப்பயம் பெண்மைத்தன்மைத்தொற்றிக்கொண்டு விட்டதால்) ஊருக்குப்போகும் பாதி வழியில் அவனது சூட்கேஸ் உடன் வெளியே வீசப்படுகிறான். அழுது கொண்டே கிராமத்துக்குப்போகிறான்.





அங்கே அவனது அக்காவின் பாவாடை சேலையை உடுத்தி அழகு பார்த்துக்கொள்ளுகிறான். அவளுக்கு பார்த்த மாப்பிள்ளையை இவன் போய் பார்க்கப்போகிறான். அவனுடைய  நடை  பாவனை மற்றும் உடல் அசைவுகள் அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.திருமண நாளில் சேலை அணிந்து கொண்டு இருப்பதைப்பார்த்த மாப்பிள்ளை வீட்டார் அக்காவின் கல்யாணத்தை நிறுத்தி விட்டு போய்விடுகிறார்கள்.  ஊருக்குள் இருக்க முடியாமல் ஓடப்பார்க்கிறான். ஒரு ஆசுபத்திரியில் சேர்த்து வைத்தியம் பார்க்க அவனது அப்பா அம்மா ஏற்பாடு செய்கிறார்கள். அங்கே அம்மா போல ஒரு திரு நங்கை அவனை அழைத்துக்கொண்டு சென்னை செல்கிறாள். அவன் ஒரு புதிய உலகத்தில் காலடி வைக்கிறான். போலீஸிடம் சிக்கிச் சீரழிகிறான்.இயலாமையை வெளிப்படுத்து யாரையும் சாபம் விட "ஒன் வீட்டுல ஒரு பொட்டை விழ..".... என்பதாக அவர்களின் வசையை வெளிப்படுத்தியிருக்கிறார் சு.சமுத்திரம்.


பிறகு ஊருக்கு ஓடிவருகிறான். அங்கிருந்து ரயில் ஏறி டெல்லி வந்து சேருகிறான். டெல்லி ரயிலில் அவனது தன்மைக்கு மரியாதை கிடைக்கிறது.  அங்கே சென்று அவர்களின் குழுவில் ஐக்கியமாகிறாள். அவளை ஒரு அம்மாவாக ஒருத்தி ஏற்றுக்கொண்டு அவளுக்கு மகள் என்ற அந்தஸ்தைத்தருகிறாள். வழக்கப்படி  ஒரு சடங்கு செய்கிறார்கள். அவனது பிறப்புறுப்பை வெட்டி எறிகிறார்கள். மணிமேகலை என்று பெயர் மாற்றம் கூட செய்து கொள்ளுகிறான் சுயம்பு.  ஒரு மருந்து கலந்த எண்ணெய் பூசி 40 நாள் பக்குவமாகப் பார்த்துக்கொள்ளுகிறார்கள்.





நல்ல வசதியான வாழ்க்கை டெல்லியில் கை கூடுகிறது.கூவாகம் திருவிழாவிற்கு கூட்டமாக வருகிறார்கள். அந்த சடங்குகளை எல்லாம் செய்கிறார்கள்.திரும்பும் வழியில் சென்னை செல்கிறார்கள். இவனை  ஏற்கனவே மகளாக ஏற்றுக்கொண்டவர்  இறந்து போய் விடுகிறார். தனது கூட்டத்தாரைப் பார்த்து ஆறுதல் சொல்லி பணம் கொடுத்து விட்டு ஒரு நாளில் திரும்பவும் வேஷ்டி சட்டை அணிந்து கிராமத்துக்கு காரில் பயணம் செய்கிறான் சுயம்பு என்ற மணி மேகலை. ஆனாலும் அந்த அங்க அசைவுகளை உடல் மொழியை மறைக்க இயலவில்லை... அப்பா அண்ணன் எல்லோரையும் பார்க்கிறான். அக்கா இறந்து விட்ட தகவல் அறிந்து வேதனை கொள்ளுகிறான்.அக்காவின்  ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொள்ளுகிறான் கையில். அப்பாவோ நீ சேலையே கட்டினாலும் பரவாயில்லை " இங்கேயே இருடா"  என்கிறார். அவனால் முடியவில்லை.அப்பாவின் கையில் பணம் கொடுத்து அண்ணனிடம் அழுகிறான். விடை பெறுகிறான்.

மீண்டும் டெல்லிப்பயணம்.


இந்திராகாந்தியைக்கொலை செய்து விடுகிறார்கள். அங்கே போக வேண்டும் என்று இவனது அம்மா சொல்ல, அங்கே போலீஸ் கலவரம் என்றாகி அவர் உயிரை விடுகிறார். அந்த இடத்தின் பொறுப்பு சுயம்புவிற்கு வருகிறது.
இவர்கள் குழுவாக சென்று ஆசீர்வாதம் செய்வது பல பெரிய பணக்காரர்கள் இவர்களை ராசியானவர்களாககருதி இவர்களுக்குப்பணம் தருவது என்பது போன்ற காரியங்களால் வரும் பணம் அதிகமாக, அதிகமாக அதை கணக்குவைத்து தம்மைப்போன்ற ஜீவன் குழுக்களிடம் இருந்து ஏதேனும் கோரிக்கை வந்தால் அ தைஉடனடியாக நிறைவேற்றுவது என்று நடைமுறை மாறுகிறது.




சென்னையில் தங்களது குழுவினருக்குப்பிரச்சனை
உடனே பொறுப்பை பிரிதொரு  நபரிடம் கொடுத்து விட்டு சென்னை செல்கிறார்கள். அரசு இயந்திரம் இயங்க ஆரம்பிக்கிறது , முதன் முறையாக இவர்களது குரலைக்கேட்கத்துவங்குகிறது... டேப் ரெக்கார்டரில் அவர்களின் குரல் ஆவேசமாகப் பதியப்படுகிறது.


நிறைய மனிதர்களை சந்தித்து நாவலை வடித்தெடுத்திருக்கிறார்.
அவரே ஒரு காட்சியில் திரு நங்கையரின் பிரச்சனையைப்படம் பிடிக்கச்செல்லும் மத்திய அரசின் அலுவலராக ஒரு காட்சியில் இயல்பாக தன்னை நிறுத்தி சபாஷ் பெறுகிறார். அவர் மறைந்தாலும் எழுத்துக்களால் அதிலும் விளிம்பு நிலை மனிதர்களின் பிரச்சனையை எளிய நடையில் தமிழ் உலகறிய க்கொடுத்துச் சென்றிருக்கிறார்.

பாவை பப்ளீகேஷன்ஸ்  வெளியீடு...

Wednesday, October 17, 2012

முத்துராமன் பட்டியிலிருந்து பெல்லாரி வரை


டிக்கிற காலங்களில் என்னை" நொண்டி நாராயணன்" என்று என்னுடைய பதின் வயது நண்பர்கள்( மனங்கொத்திகள்....?.....!) என்றுதான் அநேக  நேரம் அழைப்பார்கள். அவர்களில் யாரும் இரண்டாம் வகுப்பையோ மூன்றாம் வகுப்பையோ கடந்திருக்க வில்லை. என்றாலும் அவர்கள்தானே என்னுடன்  கரட்டாண்டி பிடிப்பது முதல் கள்ளன் போலீஸ்,  குண்டு விளையாட்டு, பம்பரம் விட்டது, கிட்டி (கில்லி) விளையாடியது  வரை என முதலும் முடிவும் வரையில் வரை  உடன் இருந்தவர்கள் இன்றளவும் நினைவில் வாழுபவர்கள்.




எட்டாம் வகுப்பு முடிந்து நகரிலுள்ள ஹாஜியார் பள்ளியில் சேர்ந்து எஸ் எஸ் எல் சி (பதினோராம் வகுப்பு) முடித்தபிறகு நான் செந்திக்குமார நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பு போய்ச்சேரும்போது அநேகமாக எனது சேக்காளிகள் முத்துராமன்பட்டி ரயில்வே கேட் ஸ்டாண்டில் ரிக்ஷாக்காரர்களாக மாறியிருந்தார்கள்.  அவ்வப்போது அவர்களோடுவந்து நிற்பது, அரட்டை அடிப்பது என்ற கோலத்தில் சைக்கிள் ரிக்ஷா ஓட்டவும் கூட இயல்பாகவே அமைந்து விட்டது. அப்போதெல்லாம் அவர்கள் காலேஜ் படிக்கிறியா மாப்பிள்ளே என்று கேட்டுக்கொள்வார்கள்.


பட்டப்படிப்பு முடித்து வேலை இல்லாமல் அவர்களுடனேயே உட்கார்ந்து அப்படியே ஒரு" சவாரி" போய் வர கற்றுக்கொண்ட நேரம் அவர்கள் சொன்னார்கள்.டேய்! நாராயணன் காலேஜ் வரைக்கும் படிச்சிருக்காண்டா. ஆனா பாரு நம்மளப்போலவே ரிக்ஷா ஒட்ட வந்துட்டான் என்பார்கள். பழைய நொண்டி என்பது மாறி "காலேஜ் நாராயணன்" ஆகிப்போனேன்.



விருது நகர் கல்லூரி.


அப்புறம் இந்திய தபால் தந்தித்துறையில் தொலைத்தொடர்புப்பிரிவில் எழுத்தராக பணியில் சேர்ந்தபோது தொழிற்சங்கம் என்னைப்பிடித்துக்கொண்டது .ஒத்த கருத்துடையவர்கள் பல அரங்கங்களினின்றும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தார்கள் எல் ஐ சி, வங்கி போக்குவரத்து, ரயில்வே , தபால் துறை,ஆர் எம் எஸ், தந்தித்துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கைவண்டித்தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், மின்சார ஊழியர்கள் என வாழ்வின் அனைத்துப்பகுதி மக்களையும்(உழைப்பாளிகளையும்) ஒரு சேர சந்தித்து உரையாட நேர்ந்த அற்புதமான வேளைகளில் நான் "டெலிபோன் நாராயணனா"க வலம் வந்தேன்.



காரைக்குடியில் தொலைத்தொடர்புத்துறையில் பணியாற்றி பிறகு மாற்றலாகி விருதுநகர் வந்த போது தான் எழுத்தறிவு இயக்கம் துளிர் விட்டுக்கொண்டிருந்தது.  அது தொன்னூறுகளின் துவக்கம். 91இல் அறிவொளி இயக்கம் மலர்ந்தது. அதில் ஒரு படை வீரனாக இணைத்துக்கொண்டு அந்தப்பணியில் அயராது வீதி நாடக வடிவிலும் சொல்லித்தரும் ஆசிரியருக்கு சொல்லிக்கொடுக்கும் பயிற்சியாளராகவும் மிகுந்த சந்தோஷத்தில் திளைத்திருந்த நாட்களில் "அறிவொளி நாராயணன்" 
ஆகிப்போனேன்.



ஒரு அறிவொளி ஆசிரியரும் கரும்பலைகையும்.


அப்போதைய ஆட்சியர் திரு ஞானதேசிகன் அவர்கள் என்னை கூட்டங்களில் பார்த்தால் என்ன டெலிபோன் நாராயணன் கூரைக்குண்டு கிராமத்துக்கு நான் வகுப்பெடுப்பது தெரியுமா? என்பார் ஒரு முறை அடுத்த முறை. புத்தகங்களை அந்த பகுதிக்கு உடனடியாக வழங்குங்கள் என்று தொலைபேசியிலேயே அன்புக்கட்டளை இடுவார். மனிதம் என்ற வார்த்தையை அறிவொளி விருது  நகர் நண்பர்களிடம் கற்றதாகக்குறிப்பிடுவார் அடிக்கடி.


பிறகு தொலைத்தொடர்புத்துறை நண்பர்களுடன் சேர்ந்து இலாகா பதவி உயர்வுத் தேர்வெழுதி அகில இந்திய கேடரில் பாஸ் ஆனேன்.ஜபல்பூரில் மூன்றுமாதப் பயிற்சி பெற்ற பிறகு  பம்பாய் சென்று ஓராண்டு  பணியாற்றி, அடுத்து சென்னையில் பிறிதொரு ஆண்டு எனப் பணியாற்றி மீண்டும் விருது நகர் வந்தேன். என்னுடன் பணியாற்றியவர்கள் எல்லாம் "நாராயணன் சார்" ஆக்கிவிட்டார்கள். ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் நான் அதிகாரியாம். எல்லோரும் சாமானியர்கள்தான்  என்பது அவர்களுக்கு தெரியாமல் போயிருக்கக்கூடும்.






பம்பாய் உயர்ந்த மாடங்களும் சேரியும்.



சென்னை அண்ணாசாலை.


அப்புறம் பதவி உயர்வில்  குஜராத் மா நிலம் கோத்ராவிற்கு சென்றேன். வேலை நிமித்தமாக அஹமதாபாத் செல்ல நேரிடும் போது "கோத்ராவாலா" என்பார்கள். ஆடிட்டர்களின்  கேள்விக்கு பதில் சொல்லிக்கொண்டு இருப்பேன். அகில இந்திய  மா நாடுகளுக்குப்போகும் சமயங்களில் "கோத்ரா நாராயண்"  என கல்கத்தாக்காரர்களும் மகாராஷ்ட்ராக்காரர்களும் செல்லமாக  அழைப்பார்கள்.





ஒரு எட்டு ஆண்டு மீண்டும் விருதுநகர்... "சார்வாசம்"தான்.  சர்வநாசமென்று சொல்ல முடியாது.


பணி மாற்றல் என்பது பிஎஸ் என் எல் அமைப்பில் எப்படியும் வந்தே தீரும். அது  வந்தது கர்நாடக மாநிலம் பெல்லாரி மாற்றல்.
அப்பா அடிக்கடி சொல்லுவார் நமது மூதாதையர் ஊர் கர்நாடகமா நிலம்  மைசூர்  அதனால்தான் நாம் கன்னடம் பேசுகிறோம். கிருஷ் ணதேவராயர் காலத்தில் குதிரைகளைக்கையாண்டு அதற்கான வார்கள்தைத்துக்கொடுத்து குதிரை லாயத்தில் வேலைசெய்து அப்படியே சவாரியும் போரும் செய்திருப்பார்கள் போல இருக்கிறது. அப்படியே பெயர்ந்து வந்து ஆங்காங்கே குடியிருந்தவர்களின் எச்சம் நான். பிறந்த மண்ணுக்கே ஒரு ஐந்தாறு தலைமுறை கழித்து வந்தவன் நான் என நினைக்கிறேன். கன்னடத்தில் பேசிப்பார்க்கிறேன். வருகிறது. ஆனாலும் சொந்தங்களுக்கிடையே பேசிய அந்த லாவகம் வர மறுக்கிறது.



பெல்லாரி ரயில் நிலையம்.





பெல்லாரி கோட்டை

இப்போது தமிழ் நாட்டிலிருந்து தொலைபேசியில்/அலைபேசியில் என்னிடம் பேசும் என் நண்பர்கள் எல்லோரிடமும்  என்னை "பெல்லாரி நாராயணன்" என்றே சொல்லிக்கொள்ளுகிறேன்.

Friday, September 7, 2012

வெல்லம் திங்கிறவன் ஒருத்தன் வெரல் சூப்புறவன் ஒருத்தன்

பேரா ச. மாடசாமியின் தொகுப்பான "சொலவடைகளும் சொன்னவர்களும்" என்ற அவரது" அருவி" பதிப்பகத்தின் வெளியீடாக வந்த புத்தகத்தின் ஒரு  "சொலவடை"தான் மேற் சொன்ன தலைப்பின் குறியீடு.
அநேகமாக நமது நாட்டில்" தும்பை விட்டு வாலைப்பிடிப்பது "என்பது கால காலமாக  நடந்தேறும் ஒரு நிகழ்வாக மாறி விட்டது  என்று சொன்னால் கூட சரியாக இருக்கும்.

சில நிகழ்வுகள்

1 தமிழன் ஆண்டி முத்து ராசாவின் 1,76,000 கோடி முறைகேடு சி ஏ ஜி
   அறிக்கை தொடர்பாக ஒரு வருடம் சிறை...

2  காமன் வெல்த் விளையாட்டில் விளையாடிய மராத்தியன்
     சுரேஷ்கல்மாதி தற்போது சிறையில்...

3  அதே விளையாட்டில் தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்ட ரூ 780 கோடியை   
     காமன் வெல்த் விளையாட்டுக்கென்றே ஒதுக்கிய பிராமண மகளின்
     முதல்வர் ஷீலா தீக்ஷித் அவர்களுடயது அவருக்கெதிராக எந்த
      சட்டமும் பாயவில்லை...

4 நிலக்கரி ஒதுக்கீட்டில் ரூ 1,86,000 கோடி பிரதம மந்திரியின்
    ஆலோசனையின் பேரில் தனியாருக்கு ஒதுக்கப்பட்டது என்ற  ஒரு
    குற்றச்சாட்டு அதில் அவரது மௌனம் நாடு போற்ற கடமைப்பட்டது...

5  தமிழகத்தில் கிரானைட் தோண்டி எடுக்கப்பட்டதில் அரசுக்கு சேர வேண்டிய
    ரூ 16,000  கோடி வரவில் வராமல் போனது ஒரு மாவட்ட ஆட்சியரால் திரு
    சகாயம் அவர்களது அறிக்கையின் பாற்பட்டது ( அவர் பிள்ளைமார்
    என்பதும்  உத்தப்புரம் தலித் மக்களுக்காக  சாக்கடை உள்ளிட்ட வசதிகள்
    செய்யாமல் விட்டபோதும் கூட)

 நிற்க...  நாம் நமது புரிதலின் அடிப்படையில் சொல்வதெல்லாம் இதுதான் ...

பூமியின் அடியில் கண்ட அனைத்து சொத்துக்களும் அரசாங்கத்துக்கே சொந்தம் என்ற தூய நடை முறை.

அரசாங்கம் என்பது  நிரந்தரமானது அதாவது போலீஸ், கோர்ட், ராணுவம்

,இத்யாதி இத்யாதி...


 விடுங்கள்...

ஒரு வேலையை செய்ய ஒருவருக்கு உத்தரவிடும் முன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகள் என்பது தெள்ளத்தெளிவாக ஏற்கனவெ வரையறுக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு அம்சம்.

அதைத்தான் நாம் நமது அரசியலமைப்புச்சட்டம் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.சரி... கிடக்கட்டும்...

ஆவன்னா ராசாவிற்கு உதவி செய்ததாகக்கருதப்படும் ப சி  எந்தவித குற்ற  உணர்ச்சியும் இல்லாமல் உள்துறையிலிருந்து  நிதியமைச்சராகத்தொடர்கிறார். இவர்தான் ஃபேர்ஃபாக்ஸ் ஊழலில் தனது மந்திரி பதவியை ராஜினாமாச் செய்தவர் என்பதை நினைவிற்கொள்(ல்)வோம்.

(மறதி என்பது மக்களின் இயல்பு ... நினைவு படுத்திக்கொண்டே இருப்பது நமது வேலை- எரிக் ஹோப்ஸ்வோம்) 

எனக்கு விபரம் தெரிந்த  நாள் முதல் ஒலிம்பிக் கமிட்டி இந்தியாவின் ஆகப்பெரும்புள்ளி சுரேஷ் கல்மாதிதான். அவரது செயல்பாடுகள் காமன் வெல்த் விளையாட்டுகளில் விபரீதமானதால் இன்று கம்பிக்குள் என் செய்ய காங்கிரஸ் என்ற பேரியக்கம் நிலைக்க வேண்டுமே அதனால் அவர்  பலிகடா ஆக்கப்பட்டார்.

ராகுல் காந்தியும் சோனியாகாந்தியும்  (போஃபார்ஸ் பணம் ஸ்விஸ் வங்கியில்)  இந்த வகையில் வரையறுக்க்கப்படவில்லை..

காமன் வெல்த் விளையாட்டில் தலித்துகளுக்கென்று ஒதுக்கப்பட்ட
 ரூபாய் 780 கோடியை விளையாட்டுக்கென்று ஒதுக்கிய பிராமணத்தி மீதி எந்த வழக்கோ எந்த விதி மீறலோ இல்லை விடுங்கள் கழுதையை...

முக்கியமாக பிரதமர் அலுவலகம் எந்த வித ஏல முறைகளையும் நடைமுறைப்படுத்தாமல் மா நிலங்களுக்கு அவர்களின் வேண்டுதலுக்கேற்ப தனியாருக்கு நிலக்கரி வெட்டி எடுக்க நில ஒதுக்கீடு ( நிலக்கரி வெட்டி எடுக்கத்தான்) செய்ததுதான்.

ஆனாலும் நான் எந்த வித களங்கமும் அற்றவன் என்று சொல்லிக்கொண்டு அமைதி ஆயிரம் வசனங்களுக்கும் மேலானது என சொல்லிக்கொண்டும், ரிசர்வ் வங்கி கவர்னர் பென்ஷன் மற்றும் உலக வங்கி பென்ஷன் பிரதமராக ஐந்தாண்டு இருந்ததற்காக பென்ஷன் என வாங்கிக்கொண்டு இந்த நாட்டில் திரிய முடியமா என்பது நாம் அனைவரும் யோசிக்க வேண்டிய விஷயம்தான்...

தமிழகத்தின் கிரானைட் மோசடியாக சித்தரிக்கப்படும் பழனிச்சாமி தற்போது சிறைக்க்கம்பிகளுக்கு அப்பால்....

இருபது வருடங்களால அவருக்கு சேவகம் புரிந்த வருவாய்த்துறை, கனிமவளத்துறை, காசுகளால் தங்களது வீடுகளுக்கு கிரானைட் பதித்த கொடுமையை எங்கே பதிவு செய்ய...


இன்றைக்கு புகார் கொடுக்கும் கிராம நிர்வாக அதிகாரிகளும் போலீஸ் குடிமனைக்காக கதறுபவர்களும் இன்றைய மத்திய மந்திரியின் மகன் கண்ணசைவில் வாழ்வு புரிந்தவர்களும் நாட்டு மக்களுக்கென்று என்ன செய்தி  வைத்திருக்கிறார்கள்...


எங்கே கோளாறு வருகிறது...

எல்லாவற்றையும் நடை முறைப்படுத்தி விட்டு  எனக்குத்தெரியாது என்பதில்தான் ...

நாமும் எத்தனைக்காலம்தான் இதைக்கேட்டுக்கொண்டே இருப்பது...


மிகவும் "போர்" அடிக்கிறது...

Saturday, July 28, 2012

என் டி வானமாமலையும் வானுமாமலையும்

என்ன ஒரு காலக்கிரகம்...




ஒரு எஸ் ஐ ஒரு மனிதனை துப்பாக்கியால் சுட்டுக்கொல்லுகிறார். அதுவும் உடை அணியாமல் ( அம்மணமாக அல்ல)

"மப்டி" என்று சொல்லுகிறார்கள்....

போகட்டும் என்ன எழவோ அது...

அவர் ஒன்றும் பெரிய மணல் அள்ளும் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி ஆள் அல்ல சாதாரணமாக ட்ராக்டர் ஓட்டி பிழைப்பை நடத்தும் சாமானிய மனிதன்.

அல்லது தினமும் கூலி வேலை செய்யும் ஒரு சக மனிதன். வான(னு) மாமலை. குடும்பத்தலைவனைக்காலி செய்து விட்டு அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பாம்... அத்தோடு மூன்று  லட்சமாம் ( நாய்க்கு அதன் வாலை வெட்டி சூப் வைத்துக்கொடுத்த கதை ஒன்று நடப்பில் இருக்கிறது)

இந்த பெயரைக்கேட்டவுடன் எம் ஆர் ராதாவுக்காக அன்றைய சூப்பர் ஸ்டார் திரு எம் ஜி ராமச்சந்திரனைத்  துருவித்துருவிக்கேள்விகள்  கேட்ட அந்தப் பொதுவுடைமை வாதியின் பெயர்  நினைவில் மிளிர்கிறது.  நாற்பது கூட நிறைவடையாத அந்த மனித உடலைத்தனது மடியில் கிடத்தி அந்த அம்மாவின் அலறல் இருக்கிறதே இந்த உலகமே அழும்.

ம்ம்ம்...

மூன்று லட்சம் ரூபாயைக்கொடுத்து அவருக்கு ஒரு அரசு வேலைக்கும் பரிந்துரைத்திருக்கிறார் நமது புரட்சித்தலைவி(!)

புரட்சித்தலைவர் என்றால் அதுஒருவர்தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த  ராமானுஜர்தான். அவர் வைணவர் (சைவர் அல்ல) சாப்பாட்டிலே கூட சைவம் அசைவம் என்கிறார்கள்; வைணவம் என்ற ஒரு சாப்பாட்டு முறை  நமக்கு பரிச்சயப்படவேயில்லை...

"நான் படித்த வேதம் இந்தத்தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு சொல்லிக்கொடுப்பதால் எனக்கு நரகத்தைக்கொடுக்குமென்றால் சந்தோஷமடைவேன். ஏனென்றால்  நான் இந்த மந்திரத்தை என்  இனிய  தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு திருக்கோஷ்டியூர் மதில் மேல் நின்று உரக்கக்கூறி அனைவரும் கற்றுக்கொள்ளச் செய்தமைக்காகவும் அவர்கள் இந்த மந்திரத்தை கேட்டுப்பயனுறுவார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் எனக்கு மட்டும் நரகம் கிடைக்கட்டும் அதைப்பயின்றதற்காக அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள் அன்றோ (?!)

சொர்க்கம்  நரகம் அது கிடக்கிறது...
ஆனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  கிடைக்கும் என்று போராடியவன் பெரும் புரட்சிக்காரனன்றோ?


அவருக்குப் பிறகு சனாதனத்தின் நெற்றியிலடித்த மகாகவி பாரதியார்...






அப்புறம் அந்தக்கொள்கையை வடிவமைத்த காரல் மார்க்ஸ், உறுதுணையாக நின்ற ஜென்னி, ஃப்ரெடெரிக் ஏங்கெல்ஸ்,தோழர் லெனின், தோழர் ஸ்டாலின், தோழர் சே குவேரா, தோழர் ஃபிடல் காஸ் ட்ரோ, தோழர் ரால் காஸ்ட்ரோ , தோழர் சாவேஸ்  போன்றவர்களைத்தவிர வேறு பெயர்கள் நினைவுக்கு வருவதில்லை

அதை விடுங்கள். ..

போலீஸ் துறையென்ற ஒன்று 1963 முதல் தேர்தல் தொடங்கி  1967 வரை ஒரு  நான்கு ஆண்டு காலம்மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் திரு கக்கன் ( அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்) அவர்களால் கையாளப்பட்டது.


அதற்கு முன்னால் கூட தமிழகத்தின் முதல்வராக இருந்த பச்சைத்தமிழன் காமராசர் முதல்வராக (1954-1963) மந்திரி சபையில் இந்தத்துறையை யார் வைத்திருந்தார்கள் என்பது தெரியவில்லை.
அவருக்குப்பிறகு முதல்வரான அனைவருமே அது பக்தவச்சலம் ஆனாலும் சரி; அண்ணாதுரையானாலும் சரி; கருணாநிதியானாலும் சரி;  எம் ஜி ராமச்சந்திரன் ஆனாலும் சரி; ஜெயலலிதாவானாலும் சரி...

( முன்னொட்டுக்களான அறிஞர், கலைஞர், புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி என்பதை த்தவிர்த்திருக்கிறேன்).

போலீஸ் துறையை முதல்வர்கள் வசமே வைத்திருக்கிறார்கள் (தாங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற குறைந்த பட்ச அறிவே இல்லாமல்)

தாழ்த்தப்பட்டவர்களுக்கு இவர்கள் ஒதுக்கிய துறைகள் சமூக நலம் அல்லது ஆதி திராவிடர் நலம் மட்டுமே. நாடாளப்பிறந்தவர்கள் ஆதித்தமிழர்கள் இல்லை போலும்

போலீஸ் என்பவன் சீருடையில் இருக்கும் விவசாயி மகன் என்ற மிகப்பெரிய அடை மொழியை விடுங்கள்.

அவன் என்ன செய்கிறானோ அது தான் சட்டம்.

*பத்மினி வழக்கில் கற்பழித்தார்கள் கூட்டாக

*தாமிரபரணியில் 17 பேரைக்கூட்டாக அடித்துக்கொன்றார்கள்  நதியின் நீரில்

*வாச்சாத்தியில் வனக்குடிப்பெண்களைக்கூட்டாகக்கற்பழித்தார்கள் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை நண்பர்களுடன் (!) கூட்டாகக்கற்பழித்தார்கள்

*பரமக்குடியில் அமைதியாக அஞ்சலி செலுத்தச்சென்ற அப்பாவிகள் ஆறு பேரை அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்கள்.
வானுமாமலைக்குக்கூட நியாயம் கிடைத்திருக்கிறது எனலாம் அவரது உயிர்த்தியாகத்திற்குப்பிறகு.

ஆனாலும் போலீஸ் செய்த படுகொலைக்கு ஒரு தேர்ந்தேடுக்கப்பட்ட அரசுமூன்று லட்சங்களையும் ஒரு வேலை வாய்ப்பையும்  மட்டுமே விலையாகக்கொடுப்பதென்றால் இந்த தேசம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? 

வேலைக்குத்தகுதியானவர்கள் என்றால் அது ஒரு சாவுக்குப்பிறகுதான் என்று ஆகி விடாதா?

கைம்பெண்கள் கதி இதுதானா

திரு விக சொன்ன கைம்பெண்கள் மறு வாழ்வு இதுதானா?

"நேர்படப்பேசு

நையப்புடை"

- மகாகவி பாரதி




Friday, May 11, 2012

அழியாத நினைவலைகள்

ஒரு மனிதன் தனது இருபதுகளில் ஒரு இடது சாரியாகவும் தனது அறுபதுகளில் ஆன்மீகவாதியாகவும் இல்லாமல் இருக்க முடியாது என்பார்கள். அதை உடைத்தவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

 இந்திய மண்ணில் ஒரு மூன்று சதம் பேர் சனாதனவாதிகளாக (மனு(அ)தர்மவாதிகள்)இருந்து கொண்டு எப்படி இந்த தேசத்தையே தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அது போல உலகம் முழுமைக்கும் நாத்தீகம் கடைப்பிடிப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் யாரையும் அடக்கியாள முயற்சிக்காதவர்கள். மனித நேயம் உள்ளவர்கள்.


அந்த வகையில் பொதிகை டி வியில் உ வாசுகியும் ஞானியும் தொகுத்த பெரியார் தொடரில் வருவாரே மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் அவர் மிகவும் என்னைக்கவர்ந்தவர். அவர் கடவுள் மறுப்பாளராக தனது இளம் வயதில் பரிணமிக்கிறார். வயது முதிர்வு காரணமாக நோய்வாய்ப்பட்டு இறுதிப்படுக்கையில் கிடக்க நேரிடுகிறது, அடுத்து மரணம்தான்..

 என் வி குறிப்பிட்டது போல வயது ஆகிவிடுகிறது நமக்கு. உடம்பின் ஒவ்வொரு பகுதியும் தனது செயல்பாட்டைக்குறைத்துக்கொள்கிறது. அனைத்து உறுப்புகளும் தனது செயல்பாட்டை முற்றிலுமாகக்குறைத்துக்கொண்டு விட்டால் அல்லது செயல்பாட்டை  நிறுத்திக்கொண்டால்  மரணம்  நம்மைத்தழுவிக்கொள்ளும்.

மூவலூர் ராமாமிர்தம் அம்மாள் தனது மரணப்படுக்கையில் இருப்பார். அப்போது அவரது சிந்தனை இதுவாக இருந்தது. அதை இப்படி வெளிப்படுத்துவார். வழக்கமான  நடை முறையில் அறுபதுகளில் ஆன்மீகத்தில் நம்பிக்கை கொண்டு எனது நாத்தீகக்கொள்கையைக்கை விட்டதாக யாரும் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறுதி மூச்சு வரை நான் நாத்தீகவாதியாகவே இருக்கிறேன் நாத்தீக வாதியாகவே மரணம் அடைவேன் என்பதை பத்திரிகையாளர்களை அழைத்து குறிப்பிடுவார்

இருபதுகளில் மார்க்சீய சிந்தாந்தங்ககளின் பால் ஈர்க்கப்பட்டிருந்தேன். தன்னையும் அப்படியான ஆளாக திரையில் திரு வைரமுத்து எரிமலை எப்படிப்பொறுக்கும் (ஏ வி எம்மின் சிவப்பு மல்லி 1980) போன்ற பாடல்களால் கவர்ந்திருந்தார். வருடாவருடம் நடக்கும் காரைக்குடி கம்பன் விழா ( 1983)வில் சிறப்பு விருந்தினராக திரு வைரமுத்து வந்திருந்தார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.


அதன்பிறகு காரைக்குடி செட்டி நாடு மகளிர் கல்லூரியில் 89 ஆம் ஆண்டு கல்லூரி துவங்கிய சமயம் கல்லூரி நிர்வாகத்திற்கும் பேராசிரியப்பெருமக்களுக்கும் பிரச்சனை.  நிர்வாகத்தை எதிர்த்து பேராசிரியர்கள் வீரச்சமர் சமர் புரிந்து கொண்டிருந்த நேரம் சகோதர தொழிற்சங்கங்கள் ஆதரவுடன். நாங்கள் தொலை பேசி ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆதரவு தெரிவித்தோம்.

 பேரா. மாடசாமி, பேரா. ராஜு, பேரா பார்த்தசாரதி, பேரா. விஜயகுமார்  பேரா மனோகரன் காரைக்குடி பேரா தேனப்பன், பேரா ஆவுடையம்மாள்,  நாகலிங்கம் குமரவேல் (தேவகோட்டை)போன்ற மூட்டா சங்கத்தலைவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சாலையோர வகுப்புகள் நடத்தி நிர்வாகத்திற்கு சவாலாக இருந்துமாணவிகளுக்கு கல்வி கெடாவண்ணம் போதித்துக்கொண்டிருந்தனர். பட்டிமன்றப்பேச்சாளர் சரஸ்வதி ராம நாதன் நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

அந்த சாலையோர வகுப்பறைகள் போராட்டம் முடியும் தருவாயில் அன்றைய திருவெரும்பூர் எம் எல் ஏ திருமதி பாப்பா உமா நாத், மற்றும் திரு வைரமுத்து ( பேரா மாடசாமியின் வகுப்பறைத்தோழன்) இருவரையும் அழைத்து ஒரு சிறப்புக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மாணவர்கள், மாணவிகளின் கலை நிகழ்ச்சியுடன். அப்போதைய காரைக்குடி எம் எல் ஏ அவர்களின் புதிய ஹோட்டல் மலரில் வைரமுத்து தங்கியிருந்தார். எனது குழந்தை  திலிப் சுகதேவுக்கு அப்போது ஒரு வயது .நான் எனது இணை மற்றும் இரு நண்பர்களுடன் அந்தப்புகைப்படம்.





தோழர் பாப்பா உமா நாத்கையில் திலீப் சுகதேவ்.
நிற்பவரில் வலது கோடி எனது துணைவியார்

மற்றோர் புகைப்படத்தில் தோழர் ஆசிரியர்
என் ராமச்சந்திரன் கையில் திலிப் சுகதேவ்.




இன்னும் சில   நிழற்பட நினைவுகள் அடுத்தாக....

Thursday, May 3, 2012

அவர்ணக்கவிதைகள் சில...

படித்ததில் பிடித்த சில அவர்ணக்கவிதைகள்
கவிஞர்களின் பெயர்களுடன்:


I




சாணிப்பால் ஊற்றி
சவுக்கால் அடித்தான்
என் பூட்டனை உன் பூட்டன்

காலில் செருப்பணிந்ததால்
கட்டி வைத்து உதைத்தான்
என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு?
என
பகடி செய்து ஏசினான்
என் அப்பனை உன் அப்பன்

"உங்களுக்கென்னப்பா?
சர்க்காரு வேலையெல்லாம்
 உங்க சாதிக்குத்தானே" என
சாமர்த்தியம் பேசுகிறாய் நீ

ஒன்று செய்!
உன்னைறியாத ஊரில் போய்
உன்னைப்பறையனென்று சொல்
அப்போது புரியும் என் வலி

                                                             - இராசை கண்மணி ராசா



II






என்னைக்கருவுற்றிருந்த மசக்கையில்
என் அம்மா தெள்ளித்தின்றதைத்தவிர
பரந்த இந்நாட்டில் எங்கள் மண் எது?

தடித்த உம் காவிய இதிகாசங்களில்
எந்தப்பக்கதில் எங்கள் வாழ்க்கை?

எங்களுக்கான வெப்பத்தையும் ஒளியையும் தராமலேயே
சூரிய சந்திரச்சுழற்சிகள் இன்னும் எது வரை?

எங்களுக்கான பங்கை ஒதுக்கச்சொல்லியல்ல
எடுத்துக்கொள்வது எப்படியென
நாங்களே எரியும் வெளிச்சத்தில் கற்றுக்
கொண்டிருக்கிறோம்

அதுவரை அனுபவியுங்கள்
ஆசீர்வதிக்கிறோம்

                                                                     -ஆதவன் தீட்சண்யா




III





விளம்பரப்படுத்துகின்றன
சாதிகளால் ஆன தேசம்
இதுவென்று
சமத்துவபுரம்
பொதுமயானம் என்று
பெயர்களைத்
தாங்கி நிற்கும்
பலகைகள்

                                                                  -யாழி




IV


சம பலத்துடன்
இருந்தபோதும்
இரண்டாம் நகர்த்தலுக்கே
தள்ளி வைக்கப்படுகிறது
சதுரங்கத்திலும்
கருப்புக்காய்கள்

                                                                                                   -யாழி



V





ஆசை ஆசையாய்
காதைத்தொட்டுக்காட்டி
பள்ளிக்கூடம் சேர்ந்த அன்று
அகர முதல் எழுத்துக்குப்பின்
அறிந்து கொ\ண்டேன்
என் சாதியை

                                        - பெரியசாமி



VI






எங்கும் இல்லை
என் மூதாதியின் பெயர்
நீ எழுதிய வரலாறு

                                             - மகுடேஸ்வரன்

Monday, January 16, 2012

மாட்டுக்கறியும் மனிதர்களும்

நாடெங்கும்
விலைவாசி உயர்வு
ஒரு டீயின் விலை
அறுபது பைசா என்பது
விலைவாசி உயர்வல்ல

பொது கிளாசில்
டீ கேட்க
தனி கிளாசில்
டீ கொடுக்க

ஒரு டீயின் விலை
ஒன்பது உயிர்கள் என்று
உயர்ந்து கிடக்கிறது
-கவிஞர் கந்தர்வன்
எண்பதுகளின் இறுதியில் எழுதிய கவிதை இது. இன்றைக்கு ஒரு டீயின் விலை ஆறு ரூபாயைத்தாண்டி நிற்கிறது. நிற்க...
ஹிமாச்சலப்பிரதேசத்தில்  ஜஜ்ஜார் நகரில் விஜய தசமியை ஒட்டிய ஒரு தினத்தில் செத்த மாட்டை உரித்த குற்றத்திற்காக ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
ஒருவர் மாட்டுக்கறி சாப்பிடுவதும் சாப்பிடாமல் இருப்பதும் அவரது சொந்த விருப்பம் சார்ந்தது. கைபர் போலன் கணவாய் வழியாக மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் ஆரியர்கள் என்று வரலாறு சொல்லுகிறது அவர்கள் ஆடு மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தவர்கள் அதையே உணவாகவும் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அவர்கள் வருகைக்கு முன்பே மூடப்பட்ட சாக்கடை கொண்ட ஹரப்பா மனிதர்கள் நாகரீகத்தில் மேம்பட்டு வாழ்ந்திருக்கிறார்கள். இன்றைக்கு பொதுப்புத்தியில் உறைத்திடுப்பதைப்போன்று ஆடுகள் மட்டுமே மேன்மை நிறைந்த புலால் உணவு உட்கொண்டு வாழ்ந்திருந்தார்களா என்பது தெரியவில்லை.
கோமேதகயாகம் என்ற பெயரில் மாட்டை சுட்டு சாப்பிட்டு யாகம் (?) செய்து வாழ்ந்திருக்கிறார்கள்
இவர்கள் அளவில்லாமல் மாடுகளைக்கொல்லுவதைப்பார்த்துதான் கொல்லாமை என்னும் ஒப்பரிய தத்துவத்தையே கௌதமபுத்தர் அருளியிருக்கிறார்.
ஆதவன் தீட்சண்யா லண்டன் சென்று திரும்பிய பிறகு ஒரு பதிவில் இருக்கிற கறிகளிலேயே விலை மிகவும் உயர்ந்ததாக இருந்தது மாட்டுக்கறிதான் என்று சொல்லியிருந்தார். எனக்கு மட்டும் சிறு வயதில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கத்தை (வட கிழக்கு மாகாணங்களில் நாய்க்கறிதான் அதிக விலைக்கு விற்கப்படுகிறதாம்) ஏற்படுத்தியிருந்தால் அதைத்தான் கடைசி வரை கைக்கொண்டிருப்பேன். தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பதுதானே நடைமுறை.
நக்கீரன் கோபால் மாட்டுக்கறி சாப்பிட்டாரா  இல்லையா என்பதல்ல இன்றைய முக்கியம். மாமி ஒருவர்மாட்டுக்கறி சாப்பிட்டாரா இல்லை சாப்பிட வில்லையா என்பதுதான் கேள்வி.  அவர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் அதை எழுதுவது எப்படி சரியாகும் என்று மரக்கறி  உணவு உண்பவர்கள் போராடுகிறார்கள்(!)
உலகம் முழுமைக்கும் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள்தான் அதிகம் இந்த உண்மை இன்று நக்கீரன் அலுவலகத்தை உடைப்பவர்களுக்கு தெரியுமோ இல்லையா என்பது நமது கேள்வி. 
மரக்கறி உணவு உண்பவர்கள் உயர்ந்தவர்கள் என்று யார் சொன்னது. அப்படியென்றால் திகாரில் ராசாவுடன் ஷர்மா ஏன் கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கிறார். கேதன் தேசாய் 3500 கோடி ரூபாயும் 3500 கிலோ தங்கமும் ஏன் சட்டத்தை மீறி சேர்க்கிறார்(அல்லது  ஏன் கொள்ளையடிக்கிறார்?).
மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் எந்த விதத்திலும் யாருக்கு குறைந்தவர்கள் அல்லர். அவர்களும் சக  மனிதர்கள் என்பதை நினைவு கொள்ளுதல் அவசியம் என்று தோன்றுகிறது.