வலைப்பதிவில் தேட...

Monday, April 25, 2011

சாதல் நன்று

பாரதியாரின் கவிதைகளில் வரும் ஒரு அற்புத வரி இது.
காற்று, நீர், நெருப்பு, மழை  எல்லாவற்றையும் அதன் குணம்
சார்ந்து பாராட்டுகளாகவே சொல்லிவிட்டு
மனித உயிர் பிரியும்
அந்த நிகழ்வை "சாதல் நன்று" என்பார்.

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது வயதானவர்கள் மரணமடைந்துவிட்டால் போதும் எங்களுக்கெல்லாம் ஒரே கொண்டாட்டம்தான். சம்பந்தப்பட்ட வீட்டுக்காரர்கள் மட்டுமே அழுவார்கள்.

எழவு கேட்க வரும் சொந்தங்கள் ஒரு முக்காட்டை ப்போட்டுக்கொண்டு அவரவர் அம்மா அப்பா அணணன், தம்பி இறந்த நிகழ்வுகளைக்கண்களில் தேக்கி ஒப்பாரியாக வரும். ஒரு மூச்சு அழுது விட்டு அப்புறம் பழங்கதை பேசிக்கொண்டிருப்பார்கள்.

'காலையில கூட பழைய கஞ்சி குடிச்சிச்' என்பதும் அந்தக்கடைசிப்பய கல்யாணத்தைப்பாக்ககூடகுடுத்துவைக்கல என்பதுமாய் அது விரிந்து கிடக்கும் ஒரு உலகம்.

கொட்டுக்காரர்கள் ஒரு பாட்டம் அடித்து விட்டு சாயா அடிக்க பிணம் விழுந்த வீட்டுக்காரனிடம் பைசா வாங்கிக்கொண்டு  கொட்டை பத்திரமாக வைத்து விட்டு எங்களைப்பார்த்து  " தொட்டுராதிங்க ஒடைஞ்சி போகும்' என்று சொல்லிச்செல்வார்கள்.

ஆனால் அவர்கள் சாயா குடித்து விட்டு அந்தத்தவிலையும் பம்பையையும் அடிக்கிற அடியில் உடையாததா நாங்கள் தொட்டால் உடைந்து விடும் என்று பின்னால் நினைப்பது உண்டு.

அந்த கொட்டுக்காரர்களுடன் சேர்ந்து வியர்க்க விருவிருக்க ஆடிக்கொண்டு தேருக்கு முன்பாக போகும் லாவகமே தனி.

அதில் பேரன் ஒருவனைத்தேரில் ஏற்றி விட்டு அவன் பயப்படுவதைப்பார்க்க வேண்டுமே! தேரைத்தூக்கி வரும் அந்த நாலுபேரும் ஒரே உயரத்தில் இருப்பதில்லை சாதாரணமாக. லம்பி லம்பி போகும் அப்பயடியான தேரில்  நானும் ஒரு நாளில் ஏழு வயதில்  எங்கள் தாத்தா செத்த நாளில் தேரில் ஏறியவன் தான்.

'கோவிந்தா! கோவிந்தா!!'என்று என்னையும் என்னைப்போல தாத்தாவின் தேரில் ஏறிய பேரன்மார்களும் முழக்கமிடசொல்லுவார்கள். தேரில் தொங்கிக்கொண்டிருக்கும் மலர்களையும் பிய்த்து கீழே சாலையெங்கும் போடவும் வேண்டும். பயந்து போய் பாதியில் அழுது இறக்கி விடசொல்லி அப்புறம் தேருக்கு முன்னால் சென்று ஒரே ஆட்டம்தான்.

இன்றைக்கு (25/04/2011)சச்சின் டெண்டுல்கர் என்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் ஒரு 85 வயது நிறைவடைந்த சாமியார் ஒருவரின் மரணத்தை அடுத்து அவரது 38 வது பிறந்த நாளைக்கூட கொண்டாமல்  டிவியில் அழுது கொண்டிருந்தார். சச்சினின் அழுகைக்கு முன்பாகவே நேற்றிலிருந்தே நிறையப்பேர் கண் கலங்கி அழுததை ஐ பி என் , என் டி டி வி ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன.

கொண்டாட வேண்டிய சாவை ஏன் இப்படி அழுது தீர்க்கிறார்கள் என்பது எனக்குப்புரியவில்லை.

தனது 14 வயதில் தேள் கொட்டியதாம் அப்போது ஒரு பொய் சொல்லியிருக்கிறார் நான்தான் ஷீரடியின்  உருவம் என்று  இன்றைக்கு 40ஆயிரம் கோடி ரூபாய் சொத்து புட்டபர்த்தி என்ற கிராமத்தில் மட்டும் இருப்பதாச்சொல்லுகிறார்கள். அவர்களது சீடர்கள்சேர்த்து வைத்த சொத்தையும் சேர்த்தால்  ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் கோடி இருக்குமாம் உலகின் 160  நாடுகளில். 715 கிராமங்களுக்கு குடி நீர் வழங்கும் பணி, சென்னைக்கு தெலுங்கு கங்கை திட்டப்பணி என்று அவருடைய சேவாசமிதியினின்றும் செய்திருக்கிறாராம். இதை அரசுகள் செய்ய முடியாதா  என்ன? நமது பணம்தான் இந்த வழியில் போய்க்கொண்டிருக்கிறதே.

அதுதான்  2ஜி ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி 

மனிதன் இறப்பது என்பது இயற்கையானது.
பிறப்பைக்கொண்டாடுவதுபோன்று சாவையும் கொண்டாடும் மன நிலை வரவேண்டும்.

ரத்த சொந்தங்களுக்கு அழுகலாம்.
நெருங்கிய நண்பர்களுக்கு அழுகலாம்.
எப்போதாவது கடவுளுக்கு அழுதிருக்கிறோமா?
மனிதர்களுக்கு அழுகலாம்.
ஆனால் தன்னைக்கடவுளின்
அவதாரமாகக்காட்டிக்கொண்டவர்களிடம்
கண்ணீர் விடலாமா?

முக்தியடைந்தததாக தினமணி எழுதுகிறது.

சித்தி அடைந்து விட்டதாக தினமலர் எழுதுகிறது.

முக்தியும் சித்தியும்  செத்துப்போவதைக்குறிக்கும் வார்த்தைகளன்றி வேறென்ன?

இன்னும் சொல்லப்போனால் மரணத்தை விடவும் பெரியதா என்ன?

2 comments:

hariharan said...

//ரத்த சொந்தங்களுக்கு அழுகலாம்.
நெருங்கிய நண்பர்களுக்கு அழுகலாம்.
எப்போதாவது கடவுளுக்கு அழுதிருக்கிறோமா?
மனிதர்களுக்கு அழுகலாம்.
ஆனால் தன்னைக்கடவுளின்
அவதாரமாகக்காட்டிக்கொண்டவர்களிடம்
கண்ணீர் விடலாமா?//

அவதாரபுருஷ்ர்கள் ஏன் சாகிறார்கள்.

அழகிய நாட்கள் said...

திரு ஹரிஹரன்!
விவிலியத்தில் ஒரு வாசகம் வரும் "இவர்கள் செய்வது இன்னவென்று தெரியாமல் செய்கிறார்கள்" அதே போலத்தான் இது போன்ற சாமியார்களும். செய்வது என்னவென்று தெரியாமல் செய்து விட்டு சொத்துக்களை அளவற்று குவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர் போல இன்னும் பல சாமியார்கள் இருக்கிறார்கள். பால் தினகரன், மாதா அமிர்தானந்தமயி, பாபா ராம்தேவ்,பங்காரு அடிகளார், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் இன்னும் இன்னும்...சொத்துக்களைக்குவித்தவர்கள்தான் இவர்களும். சாய் செத்துப்போனதைப்போல ஒரு நாள் இவர்களும் போகப்போகிறவர்கள்தான்.