வலைப்பதிவில் தேட...

Saturday, January 29, 2011

கர்த்தரைத்தேடுங்கள்; அப்போது பிழைப்பீர்கள்...

ஒரு சவாரியும் கிடைக்கவில்லை;
பெரிய துயரமாக இருந்தது. 

இயக்குனர் ராஜ் பரத்தின் உச்சகட்டம் சினிமாப்படம் 
சென்ட் ரல் சினிமாவில் நாலாவது முறையாகப்பார்த்தாகிவிட்டது.
 நடிகை ஸ்வப்னா அதில் கதா நாயகி சரத்பாபு கதா நாயகன். ஒரு கொலை சம்பந்தப்பட்ட படம்  'த்ரில்  மேட்டர்'.

மணி ஒன்பதரை ஆகிவிட்டது. முதலாவது ஆட்டம் பார்க்க வந்த சவாரியை இறக்கி விட்டதில் கிடைத்த பணத்தில் படம் பார்த்தாகிவிட்டது.

மிச்சமிருந்ததில் மூளிப்பட்டி அரண்மனை அருகே  இருந்த  கொடிமரத்து பாய் கடையில்  இரண்டு எண்ணெய்ப்புரோட்டா சால்னாவுடன் கொஞ்சமாக தேங்கைச்சட்னியுடன் கலந்து ஒரு வழியாக இரவு நேரப்பசியும் ஆற்றியாகி விட்டது.

ஆனாலும் எக்ஸ்ட்ராவாக ஒரு ஆம்லெட் அல்லது ஒரு சுக்கா வாங்கத்தான் வழியில்லை.

இரவில் ஏதேனும் சவாரி கிடைக்குமா என்று வாய்ப்பு தேடி அலைய முனைந்ததில் கடைசியாகப்போக நேர்ந்தது அல்லது காத்துக்கிடக்க முடிந்த இடம் மதுரை ரோடு சி எஸ் ஐ சர்ச்.

அன்று கிறிஸ்துமஸ் ஈவ் தினம் (1980 டிசம்பர் 24)  இரவு பனிரெண்டு மணிக்கு மேல் நள்ளிரவு ஜெபத்தை முடித்து விட்டு யாரேனும் ரிக்ஷாவில் வீட்டுக்குப்போக நேர்ப்பட்டால் நமது சைக்கிள் ரிக்ஷாவில் கொண்டு போய் விட்டு விடலாம்.

ஒரு இரண்டு அல்லது இரண்டரை ரூபாய் கிடைத்தால் போதும்.

ரிக்ஷாவின் சொந்தக்காரனுக்கு  இரவு வாடகையாக காலை வண்டி மாற்றும் பொழுது ஒரு  ஒண்ணாரூபா கொடுத்து விட்டு ஒரு கால் ரூபாய்க்கு ஒரு சாயா வாங்கி கொடுத்துவிட்டால்  அவனது கணக்கு நேர் ஆகிவிடும்.

நமது கையில் ஒரு முக்காரூபாய் தேர்ந்தால் மிகப்பெரிய விஷயம்.
அம்மாவோ அல்லது அப்பாவோ பைசா ஏதும் நம்மைக்கேட்கப்போவதில்லை;

'அல்லேலூயா' 'ஆமென்' போன்ற மொழிகளுடன் அவர்களது பிரார்த்தனைகள்
ஒரு வழியாக முடிந்து கொண்டிருந்தது.

மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் இரண்டு பேரை 'ரவுண்டு' கட்டிக்கொண்டு இருந்தார்கள. கவலையோடு நான்கைந்து பெண்கள் வாசலில் வாய் பொத்தி உட்கார்ந்திருந்தார்கள். மற்றொரு புறம் லுங்கியுடன் சிலர் மெஜூரா கோட்ஸ் கடையருகே குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

ரிக்ஷாவின் கீழே கைலியை மடித்துக்கட்டிக்கொண்டு தலைப்பாகையை இருக்கக் கட்டிக்கொண்டு வருகிற ஆண்களையும் பெண்களையும் ஆவல்மிகுதியில்  வலிய வலியப் பார்த்துக்கொண்டிருந்ததுதான் மிச்சம்.
ஒரு சவாரியும் அம்புடவில்லை.

மேலே ஏறிட்டுப்பார்த்தேன். உயரமான கட்டிடத்தின் ஒளி விளக்காக சிவப்பு நிறத்தில் சிலுவை மின்னியது.

பராசக்தி மாரியம்மன் கோவிலிலும் கூட இதே போல ஒரு 'சூலம்' சமீப காலமாக மின்னத்துவங்கியிருந்தது.

சர்ச்சின் நுழை வாயிலின் மேலாக   ஹாலோஜென் விளக்கில்  சிவப்பிலும் பச்சையிலுமாக இரண்டு வாக்கியங்கள் மட்டும் மின்னிக்கொண்டிருந்தன.

"கர்த்தரைத்தேடுங்கள்;
அப்பொழுது பிழைப்பீர்கள்"

Friday, January 28, 2011

நெல்லுச்சோறு

'சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்கே வந்ததிப்பஞ்சம்'
-மகாகவி பாரதி

'சோறு கண்ட இடம் சொர்க்கமா?'- மகாதேவி திரைப்படத்தில் வரும் பாடல் வரி இது

'சோறுகொடு; உணவு கொடு'- மன்னனை எதிர்த்த போராட்டத்தில் அட்டையில் பிடித்திருப்பார் நாடோடி மன்னன் திரைப்படத்தில் சந்திரபாபு

'சோறு' என்றொரு திரைப்படம்   நூறு படங்களை இயக்கியிருக்கிற இராம நாராயணனின் ஆரம்பகால படைப்பு

"சொக்கனுக்கு சட்டியளவு "- என்பது கூட சோறு சம்பந்தப்பட்ட பழ மொழிதான்

சோறே இல்லாமல் கமல் தனது நண்பர்களுடன் வேலையில்லாபட்டதாரியாக இருக்கும் நேரம் சாப்பிடுவது போல காட்சி அமைத்திருப்பார் கே. பாலச்சந்தர்-வறுமையின் நிறம் சிவப்பு திரைப்படத்தில்.

துரை யின் இயக்கத்தில் வந்த 'பசி' திரைப்படமும் கூட சோறை அதன் தேவைக்கான வலிகளைப் பேசும் .

இன்றைய  நாட்களில் அநேகமாக எல்லா வீடுகளிலும் சோறுதான் அதாவது நான் சொல்ல வந்தது நெல்லுச்சோறு.

எனது பதின் வயதுகளில் நெல்லுச்சோறு என்பது அல்லது தோசை போன்ற பலகாரம் என்பது தீபாவளி அல்லது பொங்கல் நாட்களில் மட்டுமே.
மற்ற நாட்களில் சோளக்கஞ்சி, கம்மங்கஞ்சி,கேப்பைக்கூழ், கேப்பைக்களி,குதிரைவாலி அரிசிச்சோறு, வரகரசிச்சாதம், பதராகிப்போன நெல்லிலிருந்து கிடைத்த கருப்பு அரிசிக்கஞ்சி, திணை அரிசியில் செய்த திணை மாவு, சாமை அரிசிக்கஞ்சி, ரேஷன் கடையில் வாங்கி வந்த கோதுமைக்கஞ்சி, பஞ்ச காலங்களில் வாங்கி வந்த மக்காச்சோள மாவின் உப்புமா இப்படியாக பல/நவதானியங்களின் புழக்கம் இருந்தது.

இன்றைக்கு அப்படியில்லை.

வீட்டில் இருந்த கம்மங்கூழ் இப்போது தள்ளுவண்டியில் கிடைக்கிறது.
'கிளப்'(ஹோட்டல்) கடையில் இருந்த இட்லி தோசை பூரி எல்லாம் வீடுகளில் தயாராகிறது.

அப்போதெல்லாம் சண்டை வரும். ஒருவன் தோற்று விடுவான். அப்புறமாக 'ஒங்க வீட்டில் என்னசோறு' என்று கேட்பான் தோற்றவன் அல்லது சண்டையில் கீழே விழுந்து எழுந்தவன்
'நெல்லுச்சோறு' என்று பெருமிதம் பொங்க சொல்லுவான் மல்லுக்கட்டில் ஜெயித்தவன்.
அடிவாங்கியவன் சொல்லுவான் 'நானும்  நாளைக்கு  நெல்லுச்சோறு சாப்பிட்டு விட்டு ஒன்னைய ஒரு கை பார்க்கிறேன்'.
இப்போதெல்லாம் சிறுவர்கள் இதுபோல கள்ளன் போலிஸ் விளையாட்டுக்கள் விளையாடுகிறார்களா? கிட்டி, பம்பரம் விடுவது இருக்கிறதா?
அநேகமாக இல்லை எனலாம்.

விளையாட்டு என்றாலே கிரிக்கெட் அதுவும் கிராமத்தில் கூட என்றாகி விட்டது.
அதிலும் கூட சில வீரர்கள் விலை போக மாட்டேன் என்கிறார்கள்.

பாசுமதி அரிசிக்கு உரிமை கொண்டாடிவிட்டான் ஒருவன். நமது படைப்புதான் அது என்பதை வலியுறுத்த போராட வேண்டி இருந்தது டங்கல் திட்டத்தால்.
மஞ்சள், பாகற்காய், வேம்பு எல்லாமே "பேடெண்ட் "என்ற பெயரில் நமது பாரம்பரிய உபயோகப்பொருட்களை நம்மிடமிருந்து பறிக்க வல்லரசுகள் திட்டம் தீட்டிக்கொண்டு நம்மை வளைய வருகின்றன. இருக்கட்டும்

"உங்க வீட்டில் என்ன சோறு" என்று  கேட்ட காலம் மலையேறி விட்டது ஆகையால் சோறு  என்றாலே அது "நெல்லுச்சோறு" என்றாகி விட்டது





Monday, January 24, 2011

தலித் இலக்கியம் நோக்கி ...

//கல்லூரியின் வகுப்பறையிலிருந்து வெட்டியான் மகனே பிணத்தைப் புதைக்க குழிவெட்டனும் வாடா வெளி யேன்னு இழுத்து வரப்பட்டிருக்கிறீர் களா? 

பள்ளிக்கூடத்தில் வாத்தியார் சாதி கேட்ட நொடியில் மற்றவன் எல்லாம் பெருமிதமாகச் சொல்ல, தன் சாதிப் பெயரைச் சொல்ல முடியாது கூசி நின்றதுண்டா நீங்கள்?

மாதச்சம்பளக் காரனாக மாறி அழுக்கு வேட்டி களைந்து தேய்த்த சட்டையோடு போய் வாடகைக்கு வீடு கேட்டு அவமானப் படுத்தப்பட்டதுண்டா நீங்கள்? 

கடந்து போகும் பீவண்டியைப் பார்த்து முகம் சுழித்து மூக்கைப்பொத்தும் உங்களால் எப்படி மலக்கூடையை தலையில் சுமந்தலையும் எங்களின் வாழ்வைக் கலைப்படைப்பாக்க முடியும் என உரத் துக் கேட்டார்கள்.//

- ம.மணிமாறன்

தீக்கதிர் நாளிதழில் திங்கட்கிழமை தோறும் வெளியாகும்  இலக்கியச்சோலையில் தோழர் ம.மணிமாறன் அவர்கள் சொல்லித்தீராதது: பத்தாண்டு  நாவல்கள் குறித்த வாசகக்குறிப்புகள் என்ற தலைப்பில்  இதுவரையிலும் 17 கட்டுரைகள் ( அனைத்தும் 2000க்குப்பின் வந்த தலித் மற்றும் விளிம்பு நிலை மாந்தர்களின் அதாவது  கிறித்துவ, இஸ்லாமிய, பெண்கள், திரு நங்கைகள் இவர்களைப்பற்றி வெளி வந்த  நாவல்கள் அவரால் ஆய்வு ரீதியில் பதிவு செய்யப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

நாளிதழில் அரைப்பக்கத்திற்கு அற்புதமான நடையில் நாவலைப்பற்றிய கதைக்கள ஒட்டத்தோடு மனிதர்களின் இன்றைய நிலைமையையும் சேர்த்து குழைத்துக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்  ம.மணிமாறன். 

தோழர் மாதவராஜ் அவரது "தீராத பக்கங்களி"ல் அநேகமாக  அந்த  நாவல்களின் எல்லா  ஆய்வுக்கட்டுரைகளையும்   தனது  வலைப்பூவில் மாலையாகத் தொடுத்துக்கொண்டு இருக்கிறார்.

அவரது   தலித் நாவல் பற்றிய ஒரு கட்டுரையில் வெளியிடப்பட்ட ஒரு  பாராவைத்தான் முதலில் நான் மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

அது அத்தனையும் நான் அனுபவித்தவைகள். நானும்  மணிமாறனும் அறிவொளி நாட்களில் தொண்ணூறுகளில் அலைந்து திரிந்த போது பரிமாறிக்கொண்ட சில சமூகப்பிரச்சனைகள்.

தவிரவும் சில  நினைவுகள்  பதிவில் கொண்டு வரப்பட வேண்டி இருக்கிறது. ஒரு செருப்புத்தைப்பவர் செருப்பணிந்த கால்களை வைத்தே வந்தவரின் முகம் பார்க்காமல் பெயரைசொல்லும் அளவு தேர்ச்சி பெற்றவராக இருப்பார்.
ஆனால் அவரிடம் செருப்பை சரிசெய்ய வந்தவர் அந்த செருப்பைக்கொடுக்கும் விதமே ஒரு வித தீண்டாமை வாடையோடுதான் இருக்கும். இதையும் பதிவு செய்ய வேண்டி இதுபோல் நூற்றுக்கணக்கான அனுபவப்பதிவுகள் தேவையாக இருக்கிறது இப்போது..

Thursday, January 20, 2011

அப்பா

"தவமாய்த்தவமிருந்து" படத்தில் அப்பாவின் அருமையை இயக்குநர் சேரன் செல்லுலாயிடில் அருமையாகப்பதிவு செய்திருப்பார்.  எனது அப்பாவைப்பற்றிப்பதிவு செய்வது அவசியமென்று தோன்றுகிறது இந்நேரம்.

எனக்கு சிறிய வயதில் அம்மை  நோய் கண்டிருக்கிறது. அதற்காக அம்மா விருதுநகரில் இருக்கக்கூடிய பராசக்தி மாரியம்மன் கோவிலுக்கு
(அநேகமாக ஒவ்வொரு ஊரிலும் இப்படி ஒரு தெய்வம் இருக்கும்; அது ஒரு பெரிய விஷயமல்ல என்னைப்பொறுத்தவரையிலும் ) ஒவ்வொரு கிழமையும் குளித்து ஈரத்துணியுடன் மாரியம்மன் கோவிலை வலம் வந்து வேண்டுதல் விடுத்திடுக்கிறார்கள்.

எனது பையன் உயிர் பிழைத்தால் அவன் உயிருடன் இருக்கும் காலம் முழுமைக்கும் (அதாவது ஆயுளுக்கும் அக்னிச்சட்டி (தீச்சட்டி)) எடுப்பான் என்று வேண்டிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

இயல்பாகவே எனக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை;

கல்லூரி நாட்களின் இரண்டு மூன்று ஆண்டுகள் இந்தப்பழக்கத்திற்குக்கட்டுப்பட்டு தீச்சட்டி எடுத்திருக்கிறேன்.

பின்னாட்களில் ( தாய், நினைவுகள் அழிவதில்லை  போன்ற நாவல்களைப்படித்தபிறகு)

எனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப்போய் விட்டபடியால்அம்மாவிடம் சென்று  "அம்மா என்னைக்கேட்காமல் வேண்டுதல் செய்து விட்டாய் தயவு செய்து அந்த அம்மனிடம்( மாரியம்மன் தான்) அதை ரத்து செய்து விடவும்" என்று சொன்னேன்.

அம்மா சொன்னார்கள்: " இவன்  நெத்தியில் முளைத்தவனாயிற்றே" என்று

எனது பரம்பரையில் எழுதப்படிக்கத்தெரிந்தவனும்
முதல் முதல் வகுப்பு பட்டதாரியுமானவன் நான் தான்.
எனது அப்பா அப்படியில்லை;அவர் அந்தக்காலத்தில் ஆறாம் வகுப்பு நிறைய நண்பர்களுடன்.

நான் இரண்டு வயதாகி இருந்த நேரம் காங்கிரஸ் சர்க்காரை எதிர்த்து தி மு க நடத்திய போராட்டத்தில் அவரும் கலந்து சிறை சென்று விட்டார். அந்த நேரம் திருச்சி ஜெயிலில் இருந்த போது
எஸ் எஸ் ஆர் மற்றும் விஜயகுமாரி  வந்து  சந்தித்து விட்டு  சென்றார்களாம்.

அப்போது என்னை கேள்வி கேட்பார்களாம் உறவினர்கள்: "அப்பா எங்கே?"
அப்பா ஜெ!! ( இப்போதெல்லாம் வழக்கில் இருக்கிற "ஜெ" இல்லை)  ஜெயில்

அப்பாவோடு கைதான சில உறவினர்கள்  பயந்து போய் நான் இனிமேல் போராட்டங்களில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டேன் என்று எழுதிக்கொடுத்து விட்டு வீடு நோக்கி ஓடி  வந்து விட்டார்களாம். அப்பா அதற்கெல்லாம் கலங்கவில்லையாம்; எவ்வளவு நாளைக்கு உள்ளே வைக்கிறார்கள் என்று ஒரு கை பார்த்து விடலாம் என்று இருந்து விட்டார்.

ஒட்டு மொத்தமாக அவர் சிறையில் இருந்த நாட்கள் 100. அதன் பிறகு ஐந்தாண்டுகள்  (1967) கழித்து தான் தி மு க ஆட்சிப்பொறுப்பை ஏற்றது.

நான் என் அப்பாவை ஒரு நாள் கேட்டேன்;

அப்படியே நீங்கள் ஏன் அந்த அரசியல் வாழ்வைத்தொடரவில்லை என்று..

அப்பாவோ செருப்புத்தைக்கும் தொழிலாளி.

அவர் குறிப்பிட்டார்.

"நமது சாதிக்குறியீடுதான் நமக்கு எதிரி தம்பீ: நம்மை முன்னேற

விடமாட்டார்கள் .   சரியான சம்பளமில்லாமல்

சாதி அடையாளமுமில்லாமல் நாம் வாழ முடியாது"

நான் முதன் முதலாக கல்லூரியில் கால் வைத்த போதும் சரி

பட்டப்படிப்பு முடித்து முதல் வகுப்பில் தேர்வு ஆன போதும் சரி

பிறகு வேலை கிடைக்காமல் எனது தெரு தோழர்களுடன்

சைக்கிள் ரிக்ஷா ஓட்டியபோதும் சரி

ஒரு எழுத்தராக DOT யில் தேர்வானபோதும் சரி

மாற்றுதலில் காரைக்குடி சென்று எட்டு ஆண்டுகள் (1982- 1990)பணியாற்றிய போதும் சரி

அப்புறமாக விருதுநகர் வந்து பணியாற்றியபோதும் சரி

1994 இல் இள நிலைக்கணக்கு அதிகாரியாக அகில இந்திய அளவில் தேர்வான போதும் சரி

பம்பாயில் ஓராண்டு பணியாற்றி பிறகும்ன் சரி

அதன் பிறகு சென்னையில் ஓராண்டு பணியாற்றிய போதும் சரி

பிறகு விருதுநகர் மாற்றலில் வந்த போதும் சரி

என்னை எந்தவிதப்புருவச்சுழிப்புமின்றி  நேசித்தவர் எனது தந்தை.

1998 இல் அவரது மரணம் என்னைக்கேள்விக்குள்ளாக்கியது.

எந்தவித உணர்ச்சிகளுக்கும் ஆட்படாத அந்த உயிர்

என்னை இன்றைக்கும் அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது...





மனிதர்களின் மரணம்

2011 தைப்பொங்கல் திரு  நாளில் கேரளா மா நிலம் சபரி மலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் சிக்கி மரணமடைந்தனர் - செய்தி


இதே புல்மேட்டில் 1999 ஆண்டும் ஒரு ஐம்பதுக்கும் மேற்பட்ட பக்தர்கள் மகர ஜோதி தினத்தில் நெரிசலில் இறந்து போனார்கள்.


இதே போல ரீதியில் கொத்து கொத்தாக மனிதர்கள் சாவது செய்தியாக ஊடகங்களின் வாயிலாக அறியப்படுவது  உயிருள்ள மனிதர்களின் மனங்களில் கரைந்து போவதுதான்  இன்றைய காலத்தின் கட்டாயமோ உலகமயமாதலின் தன்மையோ என நினைக்கையில் உள்ளம் பதற்றமடைவதைத்தடுக்க முடியவில்லை.


சமீப  காலங்களில்  வாகனப்பெருக்கத்தினாலும் குடி போதையினாலும், சரியில்லாத சாலைகளாலும், வேலைப்பளு காரணமாக வண்டியை விட்டு இறங்க முடியாமல் ஒட்டுவதாலும், சரியான ஒய்வு எடுக்க முடியாமல் தொடர்ந்து வாகனங்களை இயக்குவதாலும் விபத்துக்கள் நிகழ்கின்றன.
அதுவும் தங்க நாற்கர சாலையின் துவக்கத்திற்குப்பின் வேகத்திற்கு பஞ்சமில்லாமல் வாகங்கள் பறக்கின்றன. மணிக்கு   நூறு கி மீ வேகத்தில் இப்படி செல்லும் வாகனங்கள் எதிரில் நின்று கொண்டிருக்கும் ட்ரக், லாரி அல்ல்து கார்களின் மீது மோதிவிடுவதாலும் உயிர்ச்சேதம் என்பது அதிகரித்தபடி இருக்கிறது. முன்பெல்லாம் விபத்து என்றால் எங்கேயேனும் எப்போதாவது என்று இருந்தது. இன்றைக்கு அதுவே ஒரு தினசரி செய்தியாகி விட்டது.


எழுபதுகளின் துவக்கத்தில் இது போன்ற மரணங்கள் நகர்சார் நாட்டுப்புற பாடல்கள் வடிவில் ராஜா ராணி ஆட்டங்களில் ( குறவன் குறத்தி ஆட்டம்  எனலாம்) பதிவு பெற்றிருந்ததைக்காண முடிகிறது.
இன்றைக்குள்ள அவசர யுகம் பாடல் படைக்க எத்தனிக்கும் கவிஞர்களைக்கூடக்காணாமல் விரட்டி விட்டது.
டாக்டர்  கே ஏ குண சேகரன் அவர்கள் 1988இல் நகர் சார்  நாட்டுப்புறக்கதைகள் என்ற ஒரு தொகுப்பை  வெளியிட்டு இருக்கிறார். வித்தியாசமான படைப்புக்களை தேடித்தேடிப் பதிப்பித்த  சிவகங்கை மீரா அவர்களின் அன்னம் வெளியீடுதான் அந்தப்படைப்பு.


எனது பதின் வயதுகளில் பார்க்கத் துவங்கிய ராஜா ராணி ஆட்டங்களை சாமி ஊர்வலம் தொடங்கும்  மாலை 7 மணி முதல் விடிகாலை  4 மணிக்கு மேலாக கோமாளியாக வந்த மாயி (தங்கலாச்சேரி) என்பவர் மூக்கம்மாவாக மாறு வேஷம் போட்டு தண்டட்டியை குலுக்கி, பிறகு பேயாட்டம் ஆடி முடிக்கும் வரை தொடரும். ராஜபார்ட் மற்றும் இரண்டு பெண்கள் கொண்ட நால்வரின் கலைக்குழுவாக அது இருக்கும்.  நேயர் விருப்பமாக சில பாடல்களை ஊர்க்காரர்கள் கேட்பார்கள். அதை அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடி சபையை மகிழ்விப்பார்கள்.



"அம்பத்து மூணாம் வருஷம்
மணி எறந்தது அப்பிகை மாசம்"
என்ற மதுரை மணிக்குறவன் பாடல்,

"மாலையிடாப்பொன்னுடல் மறக்குதில்லே என்னுடல்
தேடுகிறேன் தலைவரே தெய்வமே எங்கு சென்றாய்"
என்ற முத்துராமலிங்கத்தேவர் மரணம் சொல்லும்  பாடல்,

அரியலூர் ரயில் விபத்துப்பாடல்,

கருவாயத்தேவன் பாடல்,

புயலில் தனுஷ்கோடி (1964) அழிந்த கதைப்பாடல்,

அதே வருடம் மதுரையில் நிகழ்ந்த சரஸ்வதி பள்ளிக்கூடம் இடிந்த முப்பத்தாறு குழந்தைகள் மடிந்த கதைப்பாடல் (எழுதியவர் மதுரை டி வி பச்சையப்பன்)
அந்தக்கலைஞர்கள் பாடல்களைப்பாடும் போது கண்கள் குளமாவதைத்தவிர்க்க முடியாது.
அந்தப்பாடலின் சில வரிகள்


........
பங்குனி மாதம் ரெண்டாம் தேதியிலே
பட்டப்பகல் வேளையிலே- அன்று மணி
பனிரெண்டாகையிலே- அன்று
பாதகம் நடந்த சனிக்கிழமையிலே
பரீட்சைக்குப்படிக்கையிலே-
ஸ்பெஷல் வகுப்பு பரீட்சைக்குப்படிக்கையிலே


 ..........
முத்துலட்சுமி  ராஜலட்சுமி
மோகனவள்ளி தானம்மா
கலாவதி ரெண்டு சீலாவாம்- அங்கே
முனியம்மா மேரியம்மா
மணிமேகலா செல்லம்மா ரெண்டு மீனா

..........
இப்போது நடக்கும் மரணங்களை மக்களின் மனதில் பதிவு செய்வது யார் என்பது தான் எனது இன்றைய கேள்வி.

Monday, January 17, 2011

பெட்ரோல் விலையும் சாமானியனும்

ஒரு முக்கிய விஷயம் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியத்தில் இருக்கிறது இன்றைய தேதிக்கு...

ஐ மு கூ  2 பதவி ஏற்று இரண்டாண்டுகள் நிறைவடையப்போகிறது
( மே 2011ல் தான்)

கடந்த ஆறேழு மாதங்களில்  மட்டும் பெட்ரோல் விலை ஏழாவது முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது. ( வெங்காயம் விலை ஏறியதற்கு பதிலடி கொடுத்தவர்கள் தில்லியில் நமது வாக்காளர்கள் )

பெட்ரோல் விலை ( அது மட்டுமல்ல என்பது எப்போதும் உள்ள பிரச்சனை.. அதாவது பெட்ரோல், டீசல், கெரேசின் ( கிருஷ்னா ஆயில்) சமையல் கேஸ் இத்யாதியும் தான்...) உயர்வென்றால் பெட் ரோலியப்பொருட்ளின் உயர்வு எனக்கொள்க..

பெட் ரோல் டீசம்  விலை உயர்வைக்கண்டித்து இடது சாரிகள் ஐ மு கூ 1 காலங்களில்முத்திரை  பதித்தது  இன்றைக்கும் நிழலாடுகிறது.

ஒரு தடவை அவர்கள் பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வைத்தடுத்து நிறுத்தினார்கள்.

பிறிதொரு முறை ஏற்றப்பட்ட பெட்ரோலியப்பொருட்களின் விலையைக் குறைத்து வரலாற்று சாதனை படைத்தார்கள்.

இன்றைக்கு அந்த சூழல் ஏதும் இல்லை

மத்தியில் ஆளும் அரசு

அமெரிக்க அணு ஆயுதக்கொள்கையினை  நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் ஏஜென்டாக

உலக வங்கியின் அடியாளாக

GATT   ஒப்பந்த நாயகனாக

அமெரிக்க ஏவலாளியாக

உலக மயமாதலின் மையக்கருவாக

தனியார் மய சிந்தனையாளனாக

வலம் வருகிற ஒட்டு மொத்த

தாராள மயமாதலின் சூத்திரதாரியாக

இருக்கிற மைய( அல்லது நடுவணரசு)

அரசு அகற்றப்படவேண்டும்.

வயிறு நிரம்ப சாப்பிட அனைவருக்கும்

உரிமை இருக்கிறது

நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையில்....

ஆம் ஒரு நாய் பட்டினி கிடப்பதைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று உரக்கச்சொன்ன துறவி விவேகானந்தர் வாழ்ந்த மண்ணல்லவா பாரதம்.

Friday, January 14, 2011

விகடன் வரவேற்பறையில் நான்

ஆனந்த விகடன் (19.01.2011) வார இதழின் வரவேற்பறையில்  எனது அழகிய நாட்கள் வலைப்பூ பற்றிய ஒரு சிறிய அறிமுகம் கிடைத்திருக்கிறது.

உலகம் முழுமைக்கும் இணைய தளம் மூலம் மட்டுமல்லாது விகடன் மூலமாகவும் பயணம் செய்ய  நேர்ந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சி கொள்கிற தருணமாக இனிக்கிறது. வலையில் தேடி அதை வரவேற்பறை வரை கொண்டு வந்த விகடன் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும் என்றென்றைக்கும் உரித்தாகட்டும்.

பிரபு சாலமனின் மைனா படத்திற்கு விகடன் விருது 2010 அளிக்கப்பட்டு இருக்கிறது இந்த இதழில். 
வெயில் படத்தின் இயக்குனர் வசந்த பாலன் நம்ம ஊர்க்காரர். அவரது வெயில் திரைப்படத்திற்கான முதல் பாராட்டு விழா விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் எனது தலைமையில் நடந்தது. அவருக்கு சிறந்த கதைக்காக (அங்காடித்தெரு) கிடைத்திருக்கும் விருதும் போற்றுதலுக்குரியது.



அம்பேத்கர் திரைப்படம் பற்றிய தனது பதிவாக பிரியத்துக்குரிய த மு எ க ச வின் மாநிலப்பொதுச்செயலர் ச. தமிழ்செல்வனின் பேட்டி முத்தாய்ப்பாக வந்திருக்கிறது இந்த இதழில். அம்பேத்கர் ஒரு தேசீயத்தலைவர் என்பதைக்கூட சகித்துக்கொள்ள முடியாதவர்கள்  தியேட்டரில் அவரை தீண்டாமைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை என்னவென்று சொல்லுவது ?  இது போன்ற  நிகழ்வுகளை  இனியும் இந்தியா பொறுத்துக்கொள்ள வேண்டுமா என்ன? 

ஏற்கனவே வந்த சில தலைவர்களின் படங்களுக்கெல்லாம் இந்த   நிலைமை இல்லை. மகாத்மா காந்தி, பாரதி, கிங் மேக்கர் காமராஜர், பெரியார் போன்ற படங்களுக்கு வரி விலக்கு அறிவித்ததைப்போல் இப்படத்திற்கு  அறிவிக்காமலிருக்கும் தமிழக அரசை யார் கேட்பது?

1897 இல் விவேகானந்தர் அமெரிக்காவிலிருந்து திரும்பிய சமயம் சென்னையில் அவரைக்காண பட்டியலின மக்கள் ( இனிமேல் ஆதிதிராவிட மக்கள் இல்லை) அலை மோதியிருக்கிறார்கள். அவர்களைப்பக்கத்தில் வர விடாமல் விரட்டி அடித்திருக்கிறது மற்றொரு மனிதக்(!)கூட்டம் அப்போது ஏற்பட்ட சினத்தில் விவேகானந்தரே குறிப்பிட்டாராம் "கிறுக்கர்களின் தேசம் இது" என்று.

அம்பேத்கர் திரைப்படத்திற்குக்கூட தீண்டாமை நிகழும்  இன்றைய இந்திய தேசம் கிறுக்கர்களின் தேசமாகவே தோன்றுகிறது.

Friday, January 7, 2011

புத்தாண்டுகளும் மாநாடுகளூம்

ஒரு ஆங்கில ஆண்டு முடிந்து அடுத்த வருடத்தில் அது அடி எடுத்து வைக்கத்துவங்கும் நேரமாக டிசம்பர் 31 நள்ளிரவு 1200 மணி எப்போதும் இருந்து வருகிறது. அப்படி ஒரு கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிறித்துவர்கள் இந்த நாளைக்கொண்டாடியது போக இந்துக்கோவில்களிலும் கூட இப்போது சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

அப்படிப்பட்ட ஒரு புத்தாண்டு விருது நகர் மதுரை சாலையிலிருக்கும் சி எஸ் ஐ சர்ச்க்கு முன்பாக 1980 டிசம்பர் 31 இரவு பனிரெண்டரை மணி வரை சவாரிக்காக காத்திருந்த புத்தாண்டும் எனது கணக்கில் இருக்கிறது.

இந்த வருடம் (2011) புத்தாண்டுகொண்டாட்டம் (!) ஹெரிட்டேஜ் அகாடமி இ எம் பை பாஸ் சாலை கொல்கத்தா என்ற அரங்கத்தில் எங்களது அகில இந்திய சங்கத்தின் மாநாட்டுப்பந்தலில் அமைந்தது.

இந்த மா நாடுகள், அதில் பங்கேற்பது என்பது 1981லிருந்து என்னைத்தொடர்ட்ந்து வந்து கொண்டிருக்கிறது.

1982 ஆம் ஆண்டு புத்தாண்டுக்கும் கூட இதே போல அன்றைய பெயர் கல்கத்தா. அங்கேதான் கொண்டாடினேன் தோழர்களுடன்.

அப்புறம் 1984 சென்னை விஜயசேஷ் கல்யாண மகாலில் அடுத்த மாநாடு
அதற்கப்புறம் 1987 கர் நாடக மாநிலம் ஹூப்ளியில். மா நாடு முடித்து கோவா வடக்கு தெற்கு என சுற்றி விட்டு வந்தோம்.

1991 அக்டோபரில் மத்தியப்பிரதேச மாநிலத்தலை நகர் போபாலில். இதில் கலந்து கொள்ள முடியவில்லை.

அடுத்தபடியாக 1994 திருவனந்தபுரத்தில்.
எல்லாமே கிட்டத்தட்ட டிசம்பர் மாதங்களில்தான்.


கணக்கியல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற பிறகு,
1995 ஜன 1 மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் பயிற்சி நிலையத்திற்கு அருகில் இருக்கும் நர்மதா நதி பாய்ந்தோடும் "பேடகாட்" என்ற இடத்தில்

மாநாடுகள் என்றால் அது கிளை மா நாடு, மாவட்ட மாநாடு, மாநில
மாநாடு, அதையும் தாண்டியதுதான் அகில இந்திய மா நாடு.
 இதில் வாழ்த்துரை வழங்கச்செல்லும் அரங்கங்கள் எல் ஐ சி, பேங்க்,போக்குவரத்து, ஆசிரியர் அரங்கங்கள் போன்றவை கணக்கில் வராது.
1997 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் அகில இந்திய் மாநாடு பூரி கோனார்க் சுற்றி வந்தோம் கட்டாக் நந்தன் கான் பூங்கா சுற்றிப்பார்த்தோம்.
1998 பெங்களூரில் அடுத்த மாநாடு

1999ஆம் ஆண்டின் துவக்கம் சென்னை  நுங்கம்பாக்கம் சூளை மேடு கோபால் நிவாஸ் ஹோட்டலில் எனது குடும்பத்தினருடன் அப்போதுதான் குழந்தைகளுடன் கிஷ்கிந்தா, வி ஜி பி, பீச் என்று சுற்றிப்பார்த்தோம்.

1999 மும்பையில் மாநாடு (1995 இல் மும்பை என பெயர் மாற்றம் கண்டது. அப்போது நான் மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.)
2000 ஆவது ஆண்டில் டெல்லியில் மாநாடு. ஆக்ரா சுற்றினோம்.
2002ல் கல்கத்தாவில் அடுத்த மா நாடு காளி ராமகிருஷ்ணர் அவதரித்த இடம் பார்த்தோம்.
2003 இல் கவுகாத்தி, மேகாலயா சிரபுஞ்சி சுற்றித்திரும்பினோம்.
2006இல் ஹைதராபாத்.
2008இல் ஜெய்ப்பூர்
2010 டிசம்பர் 29 தொடங்கி ஜன முதல் தேதி 2011 வரை கொல்கத்தாவில் மீண்டும் மாநாடு.
 புத்தாண்டுகள் தொடர்வதைப்போல் எனது மா நாட்டுப்பங்கேற்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.