வலைப்பதிவில் தேட...

Saturday, November 20, 2010

சுகப்பிரசவம் அல்லது பேறுகாலம்

முத்துராமன் பட்டி ரயில்வே கேட் அருகில்தான் ரிக் ஷா ஸ்டாண்டு. எதிரே மாரியப்பன் டீ கடை. அடுத்ததாக இளைஞர்கள் மன்றம். பெரும்பாலும் குமரி அனந்தன் அவர்களின் பேச்சு முழங்கிக்கொண்டிருக்கும். எல்லாம்டேப் ரெக்கார்டர் மூலமாத்தான். சி டி
 டிவிடி அப்போதெல்லாம் இல்லவே இல்லை. காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்ற ஒரு அமைப்பின் (அரசியல் கட்சியின் தலைவராக அவர் அப்போது இருந்தார்)

அடுத்தாற்போல்  நந்தவனத்துடன் கூடிய தெலாக்கிணறு( துலாம்) கிணற்றுக்கு ஊடாக பெரிய இரண்டு பட்டிக்கல் (ஒழுங்காக வடிவமைக்கப்ப்ட்ட பாறாங்கல்தான்). சில பெட்டிக்கடைகள்.சலூன் ஒன்று வாடகை சைக்கிள் கடை ஒன்று  இப்படி..
 ரயில்வே கேட்டின் வடக்காக கேட் கீப்பர் உட்காரும் ஒரு அறை. தெற்காக முனிசிபாலிடி சார்பிலமைக்கப்பட்ட குடி நீர்  பொதுக்குழாய்
கேட் கீப்பர் ரூமுக்கு கிழக்கே மணி நகரம் செல்லும் ரோடு. அதன் எதிரில் சாலையைக்கடந்தால் டி இ எல் சி சர்ச் வளாகம் அதன் மூலையில் பர்மா கடை.

வழக்கமாக இரவு நேர ரிக் ஷா வாடகைக்கு எடுத்து ஓட்ட வேண்டிய நிலைமையில் நான். சொந்த ரிக் ஷா என்னிடம் இல்லை. ஒரு நாள் இரவு மட்டும் வாடகை ரூ 1.50 . காலையில் வண்டி மாத்த வரும் ரிக்சாக்காரருக்கு பர்மாக்கடையிலிருந்து அல்லது மாரியப்பன் கடையிலிருந்து ஒரு டீயுடன் வாடகையும் தரவேண்டும். மாலைய்ல் வண்டி எடுக்க நான் வரும்போது ஒரு டீ உண்டு.

இப்படித்தான் அன்றைக்கு இரவு  நியு முத்து டாக்கீசுகு ஒரு சவாரி மட்டும் போய் விட்டு ஜேப்பில் ஒன்னாரூபாயோடு இருந்த நேரம்.  மணி பதினொன்றைத்தொட்டிருக்கும். சவாரி ஒன்றும் வரவில்லை. நான் ரிக் ஷா மெத்தையில் படுத்துவிட்டேன்.


பனிரென்டரை மணி சுமாருக்கு ஒருவர் சைக்கிளில் வந்து படுத்திருந்த என்னை எழுப்பி
சவாரி வருமா என்றார். 
சரி என்றேன்.
காட்டாஸ்பத்திரி போகணும்
வண்டியை இழுத்து அவர் பின்னாலேயே போனேன். சிவந்திபுரம் சந்து அது. இடையில் ஒரு கல் வேறு வண்டியை லாவகமாக ஒடித்து வீட்டின் முன் நிறுத்தினேன்.
பிரசவ வலியோடு அவரது மனைவி பக்கத்து வீட்டம்மாவின் துணையோடு  கையில் துணிப்பையோடு ஏற்றிக்கொண்டேன்.

வண்டியை எகிறி எகிறி மிதிக்கத்துவங்கினேன். முத்துராமன் பட்டி கேட்டிலிருந்து  நியூ முத்து டாக்கீஸ் வரை ஓரே மேடுதான்.  மணி நகரம் அப்புறம் ஒன்னாம் நம்பர் பால் பண்ணை, வாடியான் கேட், புதுத்தெரு தாண்டி, தந்தி மர ரயில்வே கேட், காமராஜ் நகர் போர்டைக்கடந்து வலதுபுறம் திரும்பி  ராமமூர்த்தி ரோட்டில் சென்று, ஆஞ்சனேயா லாட்ஜ் தாண்டி அதே திக்கத்தில் கடைசியில் இருந்த காட்டாஸ்பத்திரி கொண்டு போய் சேர்த்தேன்.  தாதிகள் வந்து பிரசவ வலியுடன் துடித்துக்கொண்டிருட்ந்த அந்த கூலிக்காரரின் மனைவியை அழைத்து உள்ளே சென்று கொண்டிருந்தார்கள்.

துண்டை எடுத்து வியர்வையை அழுந்தத்துடைத்துக்கொண்டேன்.
சைக்கிளில் பின்னாலேயே  அந்த கூலிக்காரரும் வந்து சேர்ந்தார்.
வாடகை எதுவும் முதலில் பேசவில்லை நான்.
அவரிடம் வாடகை கேட்டேன். அவர் அரக்கப்பரக்க முழித்தார்.
சரிதான் காசு இவரிடம் இல்லை போல என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள அதிக நேரம் பிடிக்க வில்லை.

சரி என்று வண்டியை எடுத்துகொண்டு திருப்பி போக எத்தனித்தேன். தற்செயலாக ரிக்ஷாவின் உள்ளே  பார்ததேன் ரிக்ஷாவின் தொட்டியில் (ஆட்கள் உட்கார்ந்து கொள்வது மெத்தை கால் வைக்கும் இடம் தொட்டி)
 ஒரே தண்ணீர்க்காடு. பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்த அந்தப்பெண்ணுக்கு கன்னிக்குடம் உடைந்து அப்படி ஆகியிருக்கிறது. எனக்கு ஒரே கவலையாகிப்போய் விட்டது.  வண்டிக்காரன் கையில் காலையில் வண்டியை கொடுக்கும்போது வாடை கடை இருக்கக்கூடாது என்றுதான்  எனது கவலை.

மெத்தையைதூக்கிப்பார்த்தேன் பழைய துணி இருந்தது. ஆனால் இந்த ஈரத்துக்கு அது சரிப்பட்டு வராது.

வாடியான் கேட் அருகில் பங்க் பர்மாகடையில் போய் ஒரு பதினைஞ்சு பைசா மஞ்சக்கலர் செல்லம் சோப் வாங்கிக்கொண்டேன்.

வண்டியை நேராக முத்துராமன் பட்டி கேட்டு குழாய்க்கு விட்டேன். அப்போதெல்லாம் எந்த நேரமும் தண்ணீர் வரும்

தண்ணீரைப்பிடித்து ஊத்தி ஊத்தி நன்றாககழுவினேன்
சற்றே வாடை குறைந்தது.
பசி எடுத்தது
மணி மூன்றை நெருங்கிவிட்டது.
பர்மா கடையில் சூடான மொச்சை ரெடியாகிக்கொண்டிருந்தது.

6 comments:

vimalanperali said...

ரொம்பவும் நெகிழ்வான பதிவு.நன்றாக இருக்கிறது.ஏழைகளுக்கு எழைதான் என்றுமே உதவுவராக,,,,,,/

அழகிய நாட்கள் said...

நன்றி தோழர் விமலன். இது போன்ற நிகழ்வுகள் நம்மை ஒரு வழியில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.

சிவகுமாரன் said...

முகத்தில் பளேர் பளேர் என்று அறைவது போலிருக்கிறது... ஏழைகளின் உலகம்...

அழகிய நாட்கள் said...

திரு சிவகுமாரன் அவர்களுக்கு!
தங்களது வருகையும் பதிவைப்படித்து கருத்து தெரிவித்தமைக்கும் எனது நன்றி! இரு வேறு உலகங்களின் தொகுப்பு இந்தியா என்றால் அது மிகையாகாது. ஒன்று ஒளிரும் (சிலருக்கு) மற்றொன்று இருட்டில் தத்தளிக்கும் ( பலருக்கு)

விடுதலை said...

இதையும் கொஞ்சம் படிக்கலாமே

பன்றிகளின் தொழுவமும் முட்டாள்களின் சொர்க்கமும்

http://soccpiml.blogspot.com/2010/12/blog-post_13.html

Anonymous said...

I am no longer certain where you're getting your info, however
good topic. I needs to spend a while learning much more or understanding more.
Thanks for wonderful info I used to be looking for this info for my mission.

Have a look at my web page: success keys, en.wikipedia.org,