வலைப்பதிவில் தேட...

Wednesday, January 20, 2010

நெத்தியில் முளைத்தவர்கள்


பத்து பனிரெண்டு வயது சுமார் இருக்கும் . அம்மா எனது சேட்டைகள் தாங்காமல் அல்லது அவர்கள் சொன்ன வீட்டு வேலைகளை செய்யாமல் 'டிமிக்கி ' கொடுக்கும் சமயங்களில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையால் திட்டியிருக்கிறார்கள். அதன் அர்த்தம் அப்பொழுது புரிபடவில்லை. "இவன் நெத்தியில மொளைச்சவனாசசே சொன்ன படி கேட்க மாட்டேங்கிறானே" என்பதுதான் அந்த வசை மொழி. அம்மாவி்ன் சின்ன வயதில் எதிரே பிராமணர் வந்தாரென்றால் 'சூததிரவாள் ஒதுங்கு' என்று குரல் கேட்டு எதிரே போகாமல் ஒளிந்து கொள்வாராம் அம்மா. இதையும் அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். ஆனால் அம்மா பள்ளிக்கூட வாசலை மிதியாதவர். எழுத்தறிவு மறுக்கப்பட்டவர். ஆனாலும் கூட இது போன்ற மனு எதிர்ப்பு வாசகத்தை எப்படி உள் வாங்கிக் கொண்டார் என்பது எனது கேள்வியாகி விட்டிருந்தது. இதற்கான பதில் தி க வின் வெளியீடான 'அசல் மனுதர்ம சாஸ்திரம்' வாங்கிப்படிக்கும் வரையும் தெரியாதென்று சொல்ல முடியாது. அதற்கு முன்பாக சில கூட்டங்களில் 'மனு' வைப்பற்றிக்கேட்டபோதுதான் அம்மாவின் வசவுக்கான காரணம் புரிந்தது. இந்து மத தர்மத்தின் அடிப்படையில் பார்த்தால் படைக்கும் கடவுள் ஒருவர் இருக்கிறார் (பிரம்மா) . காப்பதற்கு ஒருவர் (விஷ்ணு) அழிப்பதற்கு ஒருவர் (சிவன்) என்று இருக்கிறார்கள். படைக்கும் கடவுளின் நெற்றியிலிருந்து பிறந்தவன் பிராமணன்; தோளில் இருந்து பிறந்தவன் சத்திரியன்; தொடையிலிருந்து பிறந்தவன் வைஸ்யன்; பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன்; இதில் அடைபடாத ஒரு வகுப்பினரும் இருக்கிறார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள். அவர்கள் மட்டும் ஐந்தில் ஒரு பகுதியினராக அறியப்படும் சண்டாளர்கள். இவர்கள் பிரம்மாவின் உடம்பின் எந்தப்பகுதியிலும் பிறந்ததாக மனு எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பாணியில் சொல்வதென்றால் இவர்கள் மட்டுமே அவரவர் அப்பா அம்மாவுக்குப் பிறந்திருப்பார்கள் போல இருக்கிறது. நெத்தியில் முளைத்தவர்கள் எனக்கருதப்படும் பிராமணர்கள் எழுதி வைத்த மனுவை சாத்திரங்களை யாரும் கேள்வி கேட்டிருக்கமுடியாது அந்த நாட்களில். அந்த அடிப்படையில் தான் 'இவன் நெத்தியல முளைச்சவன்ல' என்கிற வசை மொழி உருவாகியிருக்கும் என பின்னாட்களில் தெரிந்து கொண்டேன் .

No comments: